என் வாழ்வின் முதல் இருபத்து ஐந்து வருடங்களை 
நீங்கள் சொல்லும் சமூகத்தின் ஆதிக்கத்தினடியில் வாழ்ந்திடாமல் போய் இருந்தால்

மார்புக்கூட்டையும் சரிந்து விழும் இடுப்பு மடிப்பையும் வக்ரகித்திருக்க மாட்டேன்

பாலினம் இரண்டு தான் என 
மூடனாய் நம்பி இருக்க மாட்டேன்

வேறெது பாலினமாய் இருப்பினும் தன்னிச்சையாய் முகம் சுழிக்கக் கற்றிருக்க மாட்டேன்

சதைக் கூடுதலையும் மெலிவையும் ஆசைக்கேற்ற உடல்கள் அல்ல என்று ஒதுக்கியிருக்க மாட்டேன்

தோலின் நிறம் வைத்து அழகை வர்ணித்திருக்க மாட்டேன்

நான் பெண்ணைக் காக்கவே பிறந்தேன் என்று சிலாகித்திருக்க மாட்டேன்

கற்பை வைத்துத்தான் தூய்மையானவள் அவள் என்று பட்டம் கட்டியிருக்க மாட்டேன்

காதல் இவ்வளவு தான் இப்படித்தான் இத்தனை முறை தான் என வரையறுத்திருக்க மாட்டேன்

என் வாழ்வின் முதல் இருபத்து ஐந்து வருடங்களை நீங்கள் சொல்லும் சமூகத்தின் ஆதிக்கத்தினடியில் வாழ்ந்திடாமல் போய் இருந்தால்,

ஒருவேளை மனிதனாகவே இருந்து இருப்பேன் போலும் நான்.