‘இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமைச் சங்கிலிகளைத் தவிர…
பெறுவதற்கோ பொன்னுலகம் இருக்கிறது.’
‘உலகத் தொழிலாளர்களே! ஒன்றிணைவோம், போராடுவோம், வென்றிடுவோம்’ நம்மில் பலர் இந்த வாசகங்களைப் பல முறை கேட்டு இருப்போம்…

ஆம்.‌.. போராடாமல் இங்கு எதையும் வென்றதாகச் சரித்திரம் இல்லை. கடைநிலை ஊழியர்களில் தொடங்கி மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் அவரவரின் உரிமைகளை இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் போராடி தான் பெற்று வருகின்றனர்….

சரி! சற்றே பின் சென்று பார்ப்போம். எங்குத் தோன்றியது இந்தத் தொழிலாளி – முதலாளி வர்க்கப் பாகுபாடு? ஆதிகாலத்தில் இருந்து நாடோடிகளாகவும், இனக்குழுக்களாகவும் வாழ்ந்த மனிதர்கள் தாம் வேட்டையாடிப் பெற்ற உணவைப் பகிர்ந்து உண்டு வாழ்ந்து வந்தனர்.. பல நூற்றாண்டுகளில் அடைந்த நாகரிக வளர்ச்சியில் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒருவருக்கு ஒருவர் வலிமையானவர்களாக மாற வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது‌‌. அந்த எண்ணமே நாளடைவில் தன்னைவிட வறியவர்களைத் தனக்கு அடிமையாக்கி ஆள வேண்டும் என மாறியது. இயந்திர வளர்ச்சியினால் தொழிற்சாலைகள் உருவாகின. இப்போது அந்த எண்ணம் ஒரு நாடு மற்றொரு நாட்டைத் தனக்கு அடிமையாக்கி ஆள வேண்டும் என மாறியது. இப்படியே தொழிலாளி – முதலாளி வர்க்கப் பாகுபாடு உருவானது. இந்த வர்க்கப் பாகுபாடே மே தினம் உருவாக ஒரு அடிப்படைக் காரணம் என்றும் சொல்லலாம்.

சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளான தொழிலாளர்கள் மிகவும் வேதனைக்கு உள்ளாயினர். இந்த நேரத்தில் தான் அமெரிக்காவின் பிலேடெல்பியா நகரில் முதன் முதலாகத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்துப் போராடத் துவங்கினர். அதுவே அந்நாட்டின் முதல் தொழிற்சங்கம் என்றும் கூறலாம். பின்னர் 1827 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் கட்டடத்தொழிலாளர்கள் அதே கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்நேரத்தில் இப்படி உலகம் முழுவதும் தொழிலாளர்கள் படும் துயரங்கள், வேதனைகள் பற்றி ‘Working Men’s Advocate’ என்ற பத்திரிகையில் வந்த செய்தி ஒரு பெரும் புரட்சியை வெடிக்கச் செய்தது. அதுவே அமெரிக்க ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக அமெரிக்கத் தொழிலாளர்கள் அனைவரையும் 10மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராட வைத்தது. என்ன செய்வதென்று அறியாத அமெரிக்க அரசும் ஒப்புக் கொண்டது. அதுவே உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களை
8 மணி நேர வேலை,
8 மணி நேர ஓய்வு,
8 மணி நேரப் பொழுதுபோக்கு என வலியுறுத்திப் போராடத் தூண்டுவதாக இருந்தது. பிறகு 1866 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி தேசிய தொழிற்சங்கம் உருவாகி, அதே ஆண்டு முதல் மாநாடும் நடந்தது. பிறகு 1886 மே மாதம் 01 ஆம் தேதி சிகாகோ நகரில் நடந்த நான்கு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க நினைத்து இராணுவதத்தைக் கொண்டு தாக்குதலை நடத்தியது, அமெரிக்க ஏகாதிபத்திய அரசு. அதன் பிறகு மே 01 -ஆம் தேதியை அனைவரும் உலகத் தொழிலாளர்கள் தினமாகக் கொண்டாடத் துவங்கினர்.

அதே சமயம் ரஷ்யாவில் லெனின் தலைமையில் கம்யூனிச ஆட்சி, அதனைத் தொடர்ந்து சீனாவிலும் கம்யூனிச ஆட்சி உருவானது. அதனால் ஏற்பட்டத் தொழிலாளர்களின் வளர்ச்சியைக் கண்டு உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படத் தொடங்கியது. அதன் பிறகு உலகம் முழுவதும் தொழிலாளர்கள் தினத்தைப் பெரும் ஆரவாரமாகக் கொண்டாடத் துவங்கினர்.

அதே போல இந்தியாவில் முதன் முதலில் தமிழகத்தில் 1923 -ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் கம்யூனிசத் தலைவர் தோழர் சிங்காரவேலரால் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் தொழிலாளர்கள் நிலைக்கும் சாதிய அமைப்புக்கும் ஒரு நெருங்கியத் தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பின்மூலம் சாதியத்தின் பெயரால் தொழிலாளர்களின் உழைப்பு , ஊதியம் என சுரண்டப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொருத்த வரை 1881 தொழிற்சாலைச் சட்டம் இயற்றப்பட்டது‌. உலகளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் தொழிலாளர்கள் போராட்டம் பெரிதாக இல்லை என்றாலும் 1928 -ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டமே மிகப் பெரிய போராட்டம். இந்தப் போராட்டத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்களின் தொழிலாளர்கள் விரோதச் சட்டத்தினால் ஆத்திரமடைந்த பகத்சிங் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசி எதிர்ப்புத் தெரிவித்தக் குற்றத்திற்காக பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும் தூக்கிலிடப்பட்டார்கள்.

இப்படி உலகம் முழுவதும் தொழிலாளர்கள் சிந்திய ரத்தம் மற்றும் உயிர்த் தியாகங்களை நினைவு கூறும் வகையில் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம். என்றாலும், நாகரிக வளர்ச்சி, இயந்திர வளர்ச்சி என்று வாய்ச்சவடால் பேசிக் கொண்டு தான் இருக்கிறோமே தவிர, இன்னும் மனிதக் கழிவுகளை மனிதக் கைகளாலே அகற்ற ஒரு சாதியினரே ஈடுபடுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் தினந்தோறும் விசவாயு தாக்கி இரண்டு பேர், மூன்று பேர் இறந்தனர் எனத் துயரச் செய்திகளையும் கேட்டு வருகின்றோம். இப்படித் துப்புரவுத் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பு ,வேலை இடங்களில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல், மகப்பேறு விடுமுறை எனப் பல கோரிக்கையை முன்வைத்து இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த முறை உலக உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் உலகமே கோரோனா எனும் கோரமுகம் கொண்ட கொடிய நோய்த் தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கி இலட்சக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்துள்ளது. இந்த நிலையிலும் கூட தன்னுடைய கொடிய ஆட்சியில் மக்களை மேலும் மேலும் வாட்டி வதைக்கும் விதமாக வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக மாற்றத் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்துவது, விவசாயிகளிகளை அழிக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்கள், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகை, ஏழை மக்களுக்குக் கடன் சுமை என மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று குவித்து வருகிறது, இந்த மோடி தலைமையிலான மத்திய அரசு.
உலகத் தொழிலாளர்களே! சாதி, மதம், இனம் என அனைத்தும் கடந்து எது_மக்களுக்கான_அரசாங்கம் என்று ஒன்றிணைந்து சிந்திப்போம்.
ஒன்றுபடுவோம், வேரறுப்போம் பாசிச மத வெறி பிடித்த ஆட்சியை…

உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள்.

<a href="http://karumpalagai.in/author/praveenkumar/">பிரவீன் குமார்</a>
பிரவீன் குமார்

புதுவை சட்டக் கல்லூரி மாணவர். அரசியல் ஆர்வமும் சமூக அக்கறையும் உள்ள செயல்பாட்டாளர். எழுத்தும், வாசிப்பும் சேர்ந்த சமூகச் செயல்பாடே மாற்றத்தை நோக்கிக் கொண்டுசெல்லும் என நம்புபவர்.

cover image attribution: © Jorge Royan / http://www.royan.com.ar / CC BY-SA 3.0