இலையாடை களைந்து
நகர வக்கற்று
சாலையில் ஒதுக்கப்பட்ட
கிளையுடலின்
அம்மணத்தைப் பகிர நடக்கிறது
ஒன்றாக நிலவில் காய்ந்து
ஒற்றைக் காலைத் தூக்கியபடியிருக்கும்
நாய்களின்
இரவுப்பசிக்கான சண்டை
தூரத்தில்
வேப்பம்பழம் பொறுக்க வரும்
கூன் விழுந்த பாட்டி
கிளையை அவசரமாக
உலுப்பி விடுகிறது
காற்று
பறத்தலின் திசை
கோவில் வாசலில்
விரட்டப்பட்டு
மறுநொடி பறக்கும்
காக்கையின்
பறத்தலின் திசை சேருமிடம்
கலசத்தின் உச்சி
எக்ஸ் கதிர்கள்
பாகங்கள் பதிவேற்ற
எக்ஸ் கதிர்கள் பாய்ச்சும்
விழிகளுக்கு மத்தியில்.....
மதுவருந்தும் விரையம்
நெகிழிக்குவளை
துணையுணவுகள்
வாங்கும் பொருட்டு
கிராமத்து மளிகைக்கடையில்
மொய்த்து நிற்கும்
ஆண்கூட்டம் மத்தியில்....
உள்ளாடையில்
ஊறிப் பிசுபிசுக்கும்
குருதிப்பசை உலர
ஒதுங்கி நின்றே
இப்போதும் வாங்கி செல்கிறாளவள்
ஓர் விடாய்க்கால அணையாடை
மென் தடம்
அடர் இருளில்
விரிந்து கிடக்கும்
கருங்கூந்தல் நெடுஞ்சாலையில்
வெள்ளைக்கோடென
விட்டுவிட்டுத் தொடரும்
நரை முடி மீதேறும்
எறும்பின்
சிறு விளையாடல்களை
கைவிட்டது....
முந்தைய இரவு அரங்கேறிய
தொலைக்காட்சி
காண்பதில் நிகழ்ந்த
சண்டையின் துவக்க கணம்...
என்றாலும்
எறும்பின் வன்தடத்திலிருந்து
கோணம் விலகியேயிருக்கும்
நானிட்ட தனித்த
மென் நகத்தடத்தின் கால்கள்...