data privacy

சாமானிய மக்களாகிய நாம் இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் தெரிந்தோ தெரியாமலோ நான்கரை‌ இன்ச் சோப்பு டப்பா போன்ற கைப்பேசி மூலம் அதில் இருக்கும் சாதக பாதகம் பற்றி கடுகளவும் சிந்திக்காமல் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை நுழைந்து விட்டோம். உலகின் பரிணாம வளர்ச்சியில் நம்மை இணைத்துத் தற்போது நம்மில் பலர் அதற்கு அடிமையாகவே ஆகிக் கொண்டோம். இப்படி நாம் தினந்தோறும் பயன்படுத்தும் கைப்பேசிக்குத் தினம் குறைந்தது மூன்று அழைப்பு, பத்து குறுஞ்செய்தி கடன் வாங்கி கொள்ளுங்கள், இதை வாங்குங்கள், அதை வாங்குங்கள் என்று வந்து கொண்டிருக்கிறது. நாமும் அந்த அழைப்பில் பேசுபவரிடம் “இல்லை, வேண்டாம்” என்றும் மறுபுறம் குறுஞ்செய்தியை அழித்துவிட்டும் கடந்து செல்கிறோம். ஆனால், என்றாவது ஒருநாள் நாம் இவை எதற்காக நடக்கிறது, இவர்களுக்கு நம்முடைய எண் எப்படி கிடைத்தது என்று எண்ணி பார்த்திருப்போமா?

ஆம்! இப்படி நாம் என்றாவது ஒரு நாள் சிந்தித்து இருந்தோமானல் இன்று இப்படி ஒரு திருட்டு அரங்கேறியிருக்குமா ? என்பது கேள்விக்குறி தான்… ஆம் நாம் இப்போது பேசப்போவது புதுச்சேரியில் அரங்கேறியுள்ள மிக பெரிய ஊழலைப் பற்றி தான்.

நாம் இப்படி பலநூறு குறுஞ்செய்திகளைக் கடந்து செல்வதைப் போல் கடந்து சென்றுவிடுவோம் என்று எண்ணி அவர்கள் தைரியமாகச் செய்யதார்களோ எண்ணவோ தெரியவில்லை. ஆனால், தனிநபரின் ஒப்புதல் இல்லாமல் ஒவ்வொருவரின் எண்களுக்கும் பிஜேபியில் இணையும்படி குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார்கள். குறிப்பாக, அவர்கள் எந்த தொகுதியில் எந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்கிறார்கள் என்பவை உட்பட அனைத்துத் தகவல்களையும் பெற்று அதை வாக்குச்சாவடி வாரியாகப் பிரித்து வாட்ஸ்அப் குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. சுமார் நான்கரை லட்சம் பேருக்கு இதுபோன்ற குறுஞ்செய்தி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

முதலில் ஒரு தனி நபரின் தகவல்கள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது ஒரு மிகப் பெரிய கேள்விக் குறியாக உள்ளது. ஆனால் அது ஒருபுறம் இருக்க, மக்களிடம் ஏன் இதற்கு எந்த ஒரு எதிர்ப்பும் எழவில்லை… கண்ணுக்குத் தெரிந்த பொருளையோ பணத்தையோ திருடினால் மட்டும் தான் அது திருட்டு ஊழலா? தனிநபரின் தகவல்கள் அனைத்தும் பெரும்பாலும் அரசாங்கம் கையில் மட்டுமே உள்ள நிலையில் சாதாரண ஒரு அரசியல் கட்சிக்கு எப்படி கிடைத்தது? அதுவும் ஆட்சியில் உள்ள கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஆக ஆட்சியில் உள்ள கட்சி என்றால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா? இதுவே இது வேறு ஒரு நாட்டில் அரங்கேறிருந்தால் அது அந்த நாட்டையே உலுக்கக் கூடிய ஊழலாக தான் பேசப்பட்டிருக்கும்… ஆனால் இந்தியாவிலோ அதற்கு மாறாக நடக்கிறது. காரணம் அரசியல் சாசனச் சட்டம் Article 21 Right to privacy இருந்தும், இன்றளவும் தனிநபர் தகவல்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படாமல் மசோதாவின் வரைவு மட்டுமே கடந்த பத்தாண்டுகளாக விவாதப் பொருளாகவே உள்ளது தான். ஆனால் ஜெர்மனி போன்ற பல நாடுகளில் தனிநபர் தகவல்கள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது மட்டுமில்லாமல், இன்று அது நவீன காலத்தின் தொழில்நுட்பப் பரிணாம வளர்ச்சிகேற்ப வெவ்வேறு வடிவில் சட்டம் விரிவுப்படுத்தப்பட்டு கடுமையான தண்டனை மற்றும் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நாமோ இங்கு இன்றும் விவாதித்துக் கொண்டு தான் உள்ளோம். சரி, இது அனைத்தும் ஒருபுறம் இருக்க பாஜக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் பல்வேறு முக்கிய அரசாங்க அமைப்புகள் ( நீதிமன்றங்கள், ரிசர்வ் வங்கி, CBI போன்றவை) எந்த ஒரு பாரபட்சமுமின்றி சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய அமைப்புகளின் மீதான தலையீட்டை அப்பட்டமாக நாம் காணமுடிகிறது. அது மட்டுமா? கல்வியிலும், கல்வி நிலையங்களிலும் காவி மயத்தைப் புகுத்துவது, அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஷரத்துகளை‌க் காலி செய்யும் விதமாக பல குடியுரிமை முதல் தொழிலாளர் நலச் சட்டங்கள் வரை மக்களுக்கு எதிரான போக்கைக் கையாண்டு வருவதை நாம் கண்கூடாகக் காணலாம். இப்படி எல்லாம் இருக்க இந்த தனிநபர் தகவல்கள் திருட்டை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்பதற்காகப் புதுச்சேரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் ஆனந்த் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்கிறார். இதில் வழக்கறிஞர் எம்.என்.சுமதி அவர்கள் மனுதாரர் தரப்பில் ஆஜராகிறார். எதிர்த்தரப்பில் புதுச்சேரி யூனியன் பிரதேச அரசாங்கம், இந்திய தலைமை தேர்தல் ஆணையம், பிரதேச மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், பிஜேபி ஆகியோர் எதிர்தரப்பாளர்களாகப் பார்க்கப்படுகிறது. தலைமை நீதிபதி மற்றும் ஒரு நீதிபதி என இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் இந்த நீதிபதிகள் கடுமையான கண்டணத்தைப் பதிவு செய்தார்கள். தேர்தல் ஆணையம், ஆதார் ஆணையம் என அனைவரிடமும் கேள்விகள் எழுப்பினர். ஒட்டுமொத்த புதுச்சேரியும் கடுமையான தண்டனையை மன்றம் வழங்கும் என்று எதிர்பார்த்த வேளையில், “இது தேர்தல் சம்பந்தப்பட்ட விஷயம் இங்கு தனிநபர் தகவல்கள் திருடப்பட்டிருக்கிறது. அது கண்டனத்திற்குரியது. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. ஆகையால், இந்த வழக்கில் நீதிமன்றத்தால் தேர்தல் ஆணையத்துக்கு வழிகாட்டுதல் மட்டும் தான் தர முடியும், ஆணையிட முடியாது. ஆகவே, தேர்தல் ஆணையம் அவர்கள் மீதான நடவடிக்கையை எடுக்கும்” என்று கூறிவிட்டது‌. ஆனால், தேர்தலே முடிந்து விட்டது. இன்று வரை தேர்தல் ஆணையம் அவர்கள் மீதான நடவடிக்கையை எடுத்ததாகத் தெரியவில்லை. ஆக, மத்தியில் ஆளுகின்ற அரசாங்கம் நாட்டின் ஜனநாயகத் தன்மை கொண்ட அரசமைப்புகளைத் தன் அதிகாரத்தால் மக்களுக்கும் அரசாங்கம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நீர்த்துப்போகச் செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய அரசு அமைப்புகளின் நெறி தவறும் பட்சத்தில் நீதிமன்றங்கள் சரியான வழிமுறையைக் கறாராகக் காட்ட வேண்டும். அப்போது தான் மக்களுக்கு அரசின் மீதான நம்பிக்கை உயிர்ப்புடன் இருக்கும். இப்படி தனிநபர் தகவல்களைத் திருடிய இவர்கள் மீது மக்கள் தங்களின் வாக்குகளால் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று நம்பி மக்களின் தீர்ப்புக்காகக் காத்திருப்போம்.

<a href="http://karumpalagai.in/author/praveenkumar/">பிரவீன் குமார்</a>
பிரவீன் குமார்

புதுவை சட்டக் கல்லூரி மாணவர். அரசியல் ஆர்வமும் சமூக அக்கறையும் உள்ள செயல்பாட்டாளர். எழுத்தும், வாசிப்பும் சேர்ந்த சமூகச் செயல்பாடே மாற்றத்தை நோக்கிக் கொண்டுசெல்லும் என நம்புபவர்.