ஏத்தோ(வ்) சீக்கிரம் சீக்கிரம் ஆண்ட வீட்டில ஒரு கேதம் அந்தத் தப்புக் கட்டய எடு…நாலு காசுக்குப் பொழப்பு இல்லாத நேரத்துல ஒரு எழவு வுழுந்துருக்கு. இந்தக் காசையும், வீட்டுல உள்ள காசையும் சேத்து நம்ம வலவுக்கு மட்டயும் மேஞ்சிடலாம், மண்ண கொழச்சி வீட்டயும் மொழுகி பூசிடலாம். வீட்டுக்குத் தேவையான சாமாஞ்செட்டயும் வாங்கிடலாம். ம்ம்ம்ம் பாப்போம் அவன் எப்புடி வுட்டுருக்கானோ…
“அறிச்ச அரிசிய போட்டுட்டுச் சிரிச்ச சித்தப்பனோட போன கதையால” இருக்கு. நா செஞ்ச வேலைய வுட்டுப்புட்டு ஒனக்கு எடுத்துக் கொடுக்கனுமோ.ம்ம்க்கும். நானே குருணி வரவு இருந்தத குத்திக் கொழிச்சிக்கிட்டு இருக்கேன். இப்போ வந்து நின்ன நெலையில தப்ப எடு அத எடுனு சொல்றது. எப்போ நா கொழிச்சி நேம்பிபுட்டுக் கஞ்சி காச்சிறது.குடியான வீட்டுக்கு ஆடு, மாடு மேக்கப் போன புள்ளயலாம் வெறும் வவுத்தோட வருங்க… வந்தோன ஆயா கஞ்சி இருக்கானு தான் கேப்பானுவ அதுக்குள்ளேயு(ங்) நா கஞ்சி காச்சலாமுனு பாத்தா நீங்க எனக்கு வேல வுடுரதுக்கே இருக்கியே…
போத்தா பொய்ட்டு வளவு பரணி மேல அவனிப் பட்டயில தான் கட்டியிருக்கு(ங்) எடுத்துட்டு வா.நா போய்ட்டு வாறேன்…
வரும்போது கஞ்சித்தண்ணிக்கு எதுமே இல்ல சுடுசாலுல கெடந்த குருணி வரவதான் இன்னக்கி ஆக்கிட்டேன். “ஒன்னால ஒன்னுமில்ல முன்னால கட்ட துணியுமில்ல”. சாலும் இன்னயிலருந்து மொட்டயாதா(ங்) கெடக்கபோது. நீராரத்தண்ணீயே குடிச்சிக் குடிச்சி எத்தன நாளு தா(ன்) வவுத்த கழுவுறது…
தப்புக் கட்டய எடுத்துக்கிட்டு இவனோடு இன்னும் இரண்டு ஆள கொண்டு போணும்.
இவுக போனவுன்னே ஆண்ட வூட்டு சன(ம்).
ஏண்டா…எப்போ எழவு விழுந்ததுக்கு எப்போ வாரிங்கே…
சரி சரி… இருக்கட்டும்யா… ஏ… இங்க வாங்கடா, சாவு செத்தவுனே வாங்கனா வழிக்கூட்டம்போது வந்திருக்கிங்களே, உங்கள…
என்ன இது “கொடும கொடுமனு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடும எதுக்காலருந்து ஆடுனுச்சா”… இவுக வூட்டுல இதுமாதிரி நடக்குனா தெரியும்…
எங்க பொழப்புக்குத் தா(ன்) பொய்ட்டு வாரோங்க, இதலா பெருசா நெனக்க வேணாஞ்சாமி…
வந்ததே நேரஞ்சென்டு இதுல வேற காரண(ங்) சொல்லாம வேலைய பாருங்க…
சரிங்க சாமி… கட்டய எல்லா எடுங்கடாவ்…
நா போய்ட்டுச் செத்த செறுவு இருந்தா அல்லிக்கிட்டு வாரே என்னா…!
சரி… சரி… நெருப்புப்பட்டி இருக்கா…
இந்தா… “ஓடிப் போனவனுக்கு ஒம்போது மாத்த தீர்ப்பு ஆப்புட்டுகிட்டவனுக்கு ஆறு மாத்த தீர்ப்பா”…
கட்டய நல்லா காயவுடுங்க… நேரஞ்சென்டு தா(ன்) வந்ததா சொல்றாக கொஞ்சம் இழுத்தாப்புல்ல அடிச்சி நிறுத்தனு(ம்) புரியுதா…
ம்ம்ம்….ம்ம்ம்ம்ம்ம்ம்…. புரியிது புரியிது…
என்னடா காச்சியாச்சா…
இதோ ஆச்சிங்க சாமி…
சரி… சரி… சீக்கிரம் ரெண்டு மொழக்கு பொடுங்க…
ஆகட்டுஞ்சாமி… ம்…ம்ம்ம்ம்…
டே…
ஏஞ்சாமி…
தட்டுனது போது(ம்) இங்க வாங்க…
சொல்லுங்க சாமியோ…
அந்த வூட்டுத் திண்ணயில கஞ்சி இருக்கு. அங்கேட்டி எடுத்துக் குடிச்சிட்டுச் செத்த நேர(ம்) கழிச்சி ரெண்டு மொழக்கு பொட்டு நிறுத்திட்டு அந்த ஒழுங்கையில போயி படுத்துக்கங்க… என்னா…?
ஆகட்டுஞ்சாமி…
ஏண்ணா… இந்தக் கஞ்சி ரொம்ப புழுங்க வாடயா அடிக்குது…
இருக்கட்டுண்டா… நல்லா ரெண்டு அலசு அலசிட்டுக் கஞ்சியு(ம்) தண்ணியுமா குடிப்போம்… என்ன பன்றது கஞ்சித்தண்ணி இல்லாத நேரத்துல… அதுவு(ம்) நெல்லுக் கஞ்சிய வச்சிருக்காங்கலே…
அது(ம்) உண்மதான் நெல்லுக்கஞ்சிய நாமல்லே(ம்) பாக்குறது அந்தக் கடவுள பாக்குரதுக்குச் சமான…ம்ம்ம்ம்ம்ம்… என்ன பன்றது, நம்ம பொறந்த எட(ம்) அப்படி…
கஞ்சிய குடிச்சிட்டு ரெண்டு மொழக்கு மீண்டும் போட்டனர்.
சரி சரி. போது(ம்) நீங்கல்லா(ம்) அங்கெட்டி தூர சொன்ன எடத்துல போயி படுத்துக்கங்க. விடியகால(ம்) சொல்லிவுடுறோ(ம்). அப்ப வந்தா போது(ம்) சரியா…
ஆகட்டுஞ்சாமியோ….!
என்ன இந்த எடத்துல மூத்தர கவுளு மூச்சி உடவாக்காலெ மொழுங்கு வேற கடிக்குது…
”தலயெழுத்திடி சண்டாலி போட்ட எழுத்திடி பொண்டாட்டி”…. ஏதாவது குப்பக்குழியா இருக்கு நம்ம தலவிதி இப்படிப் படுத்துருக்கோம்…
இருக்கட்டு… கோழி கூவுறதுக்குள்ள எழுப்பிருவாங்க செத்த பொறுத்துக்கிட்டு கண்ணசருவோ… என்ன பன்றது எல்லாம் நம்ம தல விதி…
நமக்கு ஏந்தா இப்படியாப்பட்ட பொறப்புனு தெரியல…

யாண்டா அப்படி சொல்லுர….“மாட்டுக்காரன் மாட்டுக்கு அழுதானா(ம்)….! பறையன் கொழுப்பில்லனு அழுதானா(ம்)”..! இந்தக் கதையா… நம்மலு(ம்) பாப்பானு(ம்) ஒரு காலத்துல அண்ண தம்பியா.. அப்படி இருக்கயில இது மாதிரி அப்போ ஒரு ஆண்ட வீட்டுல மாடு ஒன்னு செத்துப் போச்சா, ஆண்ட வீட்டுலருந்து ஆளு வுட்டுருக்காக. அண்ணங்கார என்னா சொன்னான.. தம்பி பாப்பானு சொல்ல. அவளவுதான் அவன் பாப்பானா பொய்த்தான. நாம இன்னும் செத்த மாட்டக் கொண்ணந்து தோல உரிச்சி பசிக்குக் கறிய திண்ணுட்டு, தோல காயவச்சி, முடிய செதிக்கி, ஊர வச்சி, கட்டயில கோந்த தடவி, ஊர வச்ச தோல எடுத்துக் கட்டயில கட்டிக்கிட்டுக் கோயிலுக்கு வெளியே தீண்டப்படாதவனா நின்னு தப்பு அடிக்கிறோம். நம்மலால வாழ்வடஞ்சவன் கோயிலு கருவறக்குள்ள நின்னு மணி அடிக்கிறான். இதா ரெண்டு பேருக்கும் உள்ள வித்தியாச(ம்). மூத்தவனா இருந்து ஒதுக்கப்பட்டுருக்கோம். அவன் நமக்குப் பின்னால வந்து ஒதுக்கவச்சிருக்கா(ன்). நாம அப்பவே போயிருந்தா இன்னக்கி பாப்பாங்குரவனும் வந்திருக்க மாட்டான். நாமளும் இந்த அளவுக்கு அடிமையாகவும் இருந்துருக்க மாட்டோம். யாரு வீட்டுல எது நடந்தாலு(ம்) அவுக அவுகளே பாத்துருப்பாங்க…
இருக்கட்டுண்ணா… நாம இருக்குற எடத்த மட்டும் ஏன் சேரினு சொல்றாக. அவுக இருக்குற எடத்தெல்லாம் ஊர்னு சொல்றாக. அவுகளுள எந்த நல்லது கெட்டதுனாலும் நம்மளயே அழைக்கிறாகளே…
அவுகல்லாம் ஆண்டாண்டு காலமா இங்கேயே இருக்காகளாம். நாம அவுகளுக்கு அடிம வேல செய்யுறதுக்குனே கூட்டியாந்தங்களாம். அவுக எது சொன்னாலும் செய்யுறதுனால நாம சேந்து இருக்குற எடத்துக்கு அப்படி சொல்லிவச்சிருக்காக. ஏனா அவுக சாமியோட தோலுலையும், தொப்புலுலையும், தொடையிலயும், அப்பறம் பாதத்துலையும் பொறந்தவுங்களா. ஆனா நாம எதுலயுமே பொறக்கலயா. அதுனால அவுகளுக்குத் தொண்டூழியம் செய்யுறதுக்குனே கடவுளு நாமலெல்லாம் படைச்சார. நம்ம சனங்கல்லெலாம் அவுகள நம்பியே பொழைக்கனுமா(ம்). இதுலயும் தீட்டுணு சொல்லி நம்மல ஒதுக்குனவுக. நாம தான் அவுகள தொடக்கூடாதாம். ஆனா அவுகளும், அவுகவூட்டு புள்ளயளும் நம்ம பொண்டுவ புள்ளயள தொடுறதெல்லாம் தீட்டு இல்ல, அந்த மாதிரி கடவுளு நம்மள படச்சிருக்காரு…
…..”வேண்டாத தீண்டாத விட்டுடுங்க உங்க முட்டாள் தனத்த
பறைய பறைய என்று பரியாய பேசாதிக
பறையனே இல்லையனா ஒங்க பாட பல்லாக்கு போவாதுங்கோ”.
……ம்ம்ம்ம்ம்… என்ன பன்றது…
விடிஞ்சோன எழுந்திரிச்சி கட்டய காச்சி அடிக்கிறாங்க
தத்ததாதத ததத தத்ததாதத ததத (செத்து பொய்த்துடா தூக்கடா தூக்குடா) அடிச்சோன நிறுத்திட்டாங்க.
ய்யோ… கொல்லிச்சட்டி ஆயத்தமாயாச்சா…பாட தூக்க நேரமாச்சே…
ம்ம்ம்… ஆச்சி… ஆச்சி…
எங்கயா போனாங்கே அந்தக் கொட்டுக்காரவிங்கே…
எங்குட்டாச்சி காச்சிக்கிட்டுருப்பாங்கே… இதெல்லா ஆயத்தமாக்கிக்கிட்டு வரச் சொல்லுவோம். அவிங்கே வந்தா தட்டுரது தானே…
ஆமாய்யோ உண்மதான்…
தூக்கு… தூக்கு… பலநாளா கெடந்த கெடப்புலயே கெடந்த கட்ட பாத்து நிதானமா கொண்டு சேக்கனுமுய்யோ…
கொண்டுபோயி அடக்க(ங்) செஞ்சிட்டு. கட்டத்தல எழுதுர எடுத்துக்குக் கூப்புட்டாங்க. அதுவும் தப்பு அடிக்குற ஆளுவ, இவுக குளிக்குற கொளம், குட்டயில குளிக்கக் கூடாதுனு எழுதாத சட்டம் இவர்களுக்குள்ளே எழுதப்பட்டிருக்கு.
ய்யோ… அவிங்கள கூப்புடுங்க கூலி குடுக்கனும்…
பெரியப்பா… இந்த பயலுவளுக்கு எவளவு கொடுக்கனும்…
எத்தன ஆளுவ வந்தாங்கே கஞ்சி எத்தன நேரம் ஊத்தினிங்க…
கஞ்சுத்தண்ணியுமா சேக்கனும்…
பெறவு இல்லயா… அவிங்களே நெல்லுக் கஞ்சிய பாத்துருக்கவே மாட்டாங்கே அதலா சும்மாவ வெளயிது சேத்துதான் சொல்லனும்…
அப்பனா ராத்திரிக்கும், காலையிலயும் தான்…
சரி தலக்கி பாஞ்சி காசு- னுப் போட்டு நாப்பத்தியஞ்சு காச கொடுத்தனுப்பு…
கொட்டுக்காரவிங்கள கூப்புடு…
என்ன சாமி சொல்லுங்க…
இந்தா கூலி. ரெண்டு நேரம் நெல்லுக் கஞ்சி குடிச்சிருக்கியே. அதலா போவ நாப்பத்தியஞ்சி காசுதா…
இன்னும் ஒரு நாப்பது காசு கொடுத்தா நல்லாருக்கு கொட்டாயி வேள பாக்கனுஞ்சாமி…
இன்னும் கொஞ்சம் போட்டுக் குடுத்தா நல்லா இருக்கு…
டே! என்ன துளுரு வுட்டுப் போச்சா நெல்லுக் கஞ்சி ரெண்டு வேள குடிச்சிருக்கிங்க, அதலா சேத்துதான் கூடவே போட்டுக் கொடுத்துருக்கு. இது பத்தலனு வேற கேக்குறிகளா…
சாமி அந்த கஞ்சில புழுங்க வாட வீசி குடிக்கக் கூட முடியல…
ஏண்ணா(வ்) எல்லாம் அற வயிரு(ம்) கொற வயிருமா கெடந்து வேளய பாத்தா இந்த ஆண்ட கொற சம்பலமா கொடுக்குறாரே இத வச்சி என்னத்த பன்றதா(ம்)…
என்னது புழுங்க வாடயா…..! நாலுநாளு கஞ்சி அதுக்குள்ளேயும் வாட வந்துரிச்சா…
“நாயி நடுகடலுக்கு போனாலும் நக்கிதா குடிக்கனும்” அது மாதிரி, நாங்க குடுக்குறத வாங்கி பொழக்கிற நாய்வோளுக்குப் பேச்சி மசுரு பாரு… ச்சீசீச்ச்சீசீ அங்கெட்டி போ கிட்ட நிக்காத…
“காலம் தெரியாம கரட்டா காவடி எடுத்த கதையால இருக்கு” நம்ம கத. இத வச்சி என்ன பன்றது கஞ்சித் தண்ணிக்கும் எதயும் வாங்க முடியாது ஒன்னும் பண்ண முடியாது. நாலய பொழப்பு எப்படி ஆகுமுனும் தெரியல. நாமளே “கரையா தா(ங்) வாயீரங் கொண்டு பொழச்ச பொழப்பால இருக்குறோம்”. புள்ள குட்டியல வச்சி எப்படி காலந்தள்ளுறதுனு ஒன்னுமே புரியலயே. அந்தக் கடவுளுக்குக் கூட தெரியல எங்களோட கஷ்டம்…
புலம்பிக்கொண்டே சென்றனர்.
ஆத்தோ ஏஎ… ஆத்தோ இந்தா ஆண்ட வீட்டுல குடுத்த கூலி …
“ஊருக்கு ஓமலுப்பு வீட்டுக்கு வயித்தெரிச்ச” கதயால பொழப்புக்குப் போற பொழப்புக்குப் போறனு பத்துக் காசு, அஞ்சுக் காசுமா கொண்ணாந்து கொடுத்தா எப்போ வளவ மேயிறது…
..…தெக்கித்தி மழ பேஞ்சா எல்லா(ம்) கரஞ்சி காத்தோடக் காத்தா ஒன்னும் இல்லாம போயிறும். “வேலயத்த வெங்குடா வேலய போட்டுத் தொங்குடானு” நீ கொடுக்குற காச வச்சி என்ன வேல பாக்குறது…. நீ வீட்ட சரிபன்றதுனு சொல்லுறது ”குண்டிய தூக்கி குசு விடமுடியாதவ(ன்) தோப்புக் குத்தவ எடுத்த” கதயாலா இருக்கு…
நம்மல ஈன சாதியா படச்சிச்சிட்டா(ன்)……! ஏதோ நடக்குறது நடக்கட்டும். ”இட்டாருக்கு இட்ட பல(ன்) எழுதுனாருக்குக் கோடி பல(ன்)” அது மாதிரி நம்மல படச்சவ(ன்) நம்மல காப்பாத்தமயா போய்டுவா(ன்)…
முகப்பு படம்: © ‘Parai, Mother of all percussion instruments’ by Vishwa Bharath is
based on a work at https://www.instagram.com/p/B-CkdVEB2Ow/.
Permissions beyond the scope of this license may be available at https://www.instagram.com/vishwa_n_bharath/.