ஏன்னா! பக்கத்தாத்துல இருக்கானே! அந்தப் பையன்! அவனுக்கு ஏதோ டிப்ரெஷ்ஷன்னு சொன்னேளே! ஏனாம்? அது ஒன்னுமிலேடி! கொரோனாத் தொற்றாம்! தனிச்சு வச்சுட்டாளாம்! தனி ரூம் கொடுத்துட்டாளாம்! தனி விரிப்பெல்லாம் கூடக் கொடுத்துட்டாளாம்! தனி பாத்திரம் பண்டங்களாம்! சோறும் மாத்திரை மருந்துகளும் கூட ரெண்டடி தள்ளி நின்னுட்டுதான் கொடுக்குறாளாம்! பேசறதுக்குக் கூட துணைக்கு யாருமில்லையான்டி! அதான் இப்படி ஆயிட்டானாம்! என்ன நீங்க சொல்றது வேடிக்கையான்னா இருக்கு! இதையே தான மாசத்துக்கு மூணு நாள் தீட்டுன்னு நேக்கும் எல்லாரும் பண்ரா! நாங்கெல்லாம் மாத்திரை மருந்துனு தேடிண்டு போறோமா?! நாட்டில ஒவ்வொரு மனுஷாளுக்கும் ஒரு ஒரு நியாயமான்னா?! மா! டீத்தண்ணி குடிச்ச டம்ப்ளர வெளி பைப் தண்ணில கழுவி மதில் செவுத்துல கமுத்தி வச்சுட்டேன்! போய்ட்டு வரேன் மா! எனப் பெண்ணுரிமைப் பேச்சுக்கு நடுவே புகுந்து பளார் என ஒலித்து விட்டுச்சென்றது துணிச் சலவைக்கு வாரந்தோறும் வந்து செல்லும் சிறுமியின் குரல்!
சமூக இடைவெளி by விஷ்ணு is licensed under a Creative Commons Attribution 4.0 International License.