மக்களின் வரிப்பணத்தால் கொழுத்துப் போன கஜானாவைக் குறைக்கும் வண்ணம் புலவருக்கு அள்ளி இரைத்து வருவோருக்குப் பரிசளித்து வரலாற்று வக்கீல்களால் வள்ளலென பெயரெடுத்த கதையாய்…. போஸ்டர்களில் பித்தலாட்டமாய் இருக்கிறது மிகை பெயர்கள்… குடிகாரர்கள் மதுப்பிரியர்களாய் மாறுவதற்கு முன்பே இங்கு அடை மொழிகள் கடைக்கோடி வரை அரசியலாக்கப்பட்டுவிட்டன மதத்தையும் ஜாதியையும் பெயருக்குள்ளே பதுக்கி வைக்கும் அறிவியல் சிந்தனைகள் மெச்சத்தக்கவைத்தான் வார்த்தைத் திணிப்புச் சிந்தனைத் திணிப்பின் வடிவமாய்த்தான் எப்போதும் இருந்திருக்கிறது அதனால் ஆதிக்கமும் அதிகாரமும்தான் இன்றும் வார்த்தைகளில் மிளிருகிறது வார்த்தைகளின் அரசியலும் பெயர்களின் புதிர்களும் சிலாகிக்க மட்டுமே என்றால் நான் கத்தி கழுத்துக்கு வந்தால்தான் கத்துவேன் என்பது பொருள் உறையிலிருக்கும்போதே கத்துவதற்கு உரிமை நமக்குண்டு…. இல்லையென்றால்இருக்கிறவர்கள் '
இருந்தவர்கள்' என்ற பெயர் மாற்றம் பெற்றிடுவார்கள்…-த.வ.அநார்யா
இதற்குமேல்
காதலைப்
புனிதப்படுத்த விரும்பவில்லை
கங்கையைப் போல்
மாற்றிவிட்டோம்
புனிதப்படுத்திப்
புனிதப்படுத்தி
அசிங்கப்படுத்தியது தான் மிச்சம்
குடும்ப வாழ்வின்
ஆணாதிக்க அடக்குமுறைகளைப்
பெண்கள் பழகிக்கொள்ளப்
பயிற்சி வகுப்புகளைக்
காதல்
என்றோ தொடங்கி விட்டது
இன்றும் கூட
முதலாளித்துவ
முன்னேற்பாடுகள் தான்
காதலிற்குக்
காரணிகளாய் உள்ளன
காதலும் கூட
சாதியில் சிக்கிக்
காலங்கள் ஓடி விட்டது
இன்றும்
அதே
`உண்மைக்காதல்'
வசனங்கள் பேசி
ஊமைப்பெண்களைத் தான்
உருவாக்குகிறோம்
குமார் சுரேஷையும்
தேவி சந்தியாவையும்
காதலிக்கத் தொடங்கிவிட்டனர்
காதலும்
தன்னைப் புதுப்பித்துக் கொண்டது
நாம்தான்
மத வரையறைகளைக்
காதலுக்குள் புகுத்திப்
புனிதமென்ற பெயரிலே
புண்ணாக்கிக் கொண்டிருக்கிறோம்
வரையறைகள்
வக்கிரமானவை
உன் காதலை
நீ செய்
அது மட்டும் தான்
காதலென அடம் பிடிக்காதே
(நன்றி:பசுவய்யா)
இனியாவது
காதல்
புனிதம் உதறி
திரும்பட்டும்…….
-த.வ.அநார்யா
மழை நாட்கள்
அத்தனை எளிமையாய்
கடந்து போவதில்லை
சில நினைவுகளை
உதிர்த்து விட்டு
ஆழமாய் இறங்கிக்
கிளறிவிட்டுத்தான் செல்கின்றன
ஒன்றாய் சேர்ந்து
நனைந்த நேரங்களும்
அந்நேரம் முத்தத்தோடு
சேர்ந்த மழைத்துளியும்
மழைத்துளி கலந்த தேநீரும்
இதற்கு விதிவிலக்கல்ல
பொழுதுகளைப்
பொக்கிஷங்களாய்
மாற்றும் திறமை
மழைக்கு மட்டும்தான் உண்டு
ஆம்
மழை நாட்கள்
அத்தனை எளிமையாய்
கடந்து போவதில்லை…
-த.வ.அநார்யா
அநார்யா கவிதைகள் by த வ அநார்யா is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.