இந்தியாவில் சாதியும் அதன் அதர்மமும்
உலகம் முழுவதும் பொருளியல் மற்றும் பொருட்களின் உடைமை சார்ந்து வர்க்கங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்திய நாட்டில் வர்க்க வேறுபாடுகளைப் பொருளாதாரக் காரணங்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை. இந்திய உற்பத்தி உறவுகளில் வர்க்க வேறுபாட்டைத் தீர்மானிப்பதில் பொருளாதாரத்தைப் போலவே சாதியும் மிக முக்கியமான காரணியாக இருந்து வருகிறது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோற்றுவிக்கப்பட்ட நான்கு வர்ணச் சமூக அமைப்பு முறையும், அதனை நிலைநிறுத்தும் மனுதர்மம், வேதங்கள், உபநிடதங்கள், பிரமாணங்கள், பின்னர் காவியங்கள், காப்பியங்கள் இவையெல்லாம் சாதி முறையைப் பாதுகாத்து வருவதோடு அதற்கு ஒரு தெய்வீகத்தன்மையையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தெய்வீகத் தன்மை காரணமாகத்தான் சாதி வாழ்கிறது என்று இல்லாவிட்டாலும், சாதியை நிலைநிறுத்துவதில் அது முக்கியமான பங்கை வகிக்கிறது. அது போலவே சாதியின் மற்றொரு மிக முக்கியமான இயல்பு பொருளாதார உறவுகளைத் தீர்மானிப்பதாகும். சரியாகச் சொல்லப்போனால் சாதியின் வேர் பொருளாதார உறவுகளில் தான் இருக்கிறது.
பொதுவெளிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. கல்வி, வேலை, விளையாட்டு, கலை மற்றும் இதர பொது உரிமைகளான கோவில், ஊர், நிர்வாகம் உள்ளிட்ட எல்லாவற்றிலிருந்தும் புறக்கணிக்கப்பட்டார்கள். கல்வி பெறுவதில் ஏற்படுத்தப்பட்ட தடை தலைமுறை தலைமுறையாகப் பஞ்சம, சூத்திர மக்களைப் பாதித்தது.
நான்கு வருணங்களாக இந்தியச் சமூகம் பிளக்கப்பட்டுள்ளது. புனிதம், தீட்டு என்கிற கருத்தாக்கங்களால் மட்டுமல்ல, தொழிலின் அடிப்படையிலேயே பிரதானமாக மக்கள் பிளவுபடுத்தப்பட்டார்கள். எனவே தான் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் இந்தியச் சாதிமுறை என்பது தொழில்களின் பிரிவினை அல்ல; தொழிலாளர்களின் பிரிவினை என்றார். இந்தச் சாதிமுறைதான் ஒவ்வொரு பிரிவினருக்குமான கடமைகளையும் உரிமைகளையும் தீர்மானித்தது. இப்பிரிவினைக்குக் கடவுளின் பெயரால் விளக்கங்களும் கொடுக்கப்பட்டன. கடவுளின் தலையிலிருந்து பிறந்தவன் பிராமணன், தோளில் இருந்து பிறந்தவன் சத்திரியன், வயிற்றிலிருந்து பிறந்தவன் வைசியன், பாதங்களிலிருந்து பிறந்தவன் சூத்திரன், கடவுளின் அம்சமே இல்லாமல் சபிக்கப்பட்டுப் பிறந்தவன் பஞ்சமன் என்கிறது ரிக் வேதம். வர்ணங்களில் மேலே செல்லச்செல்ல புனிதமும் உரிமைகளும் பெற்றவர்களாகவும் கீழே இறங்கி வரவர உரிமைகள் ஏதுமற்ற அடிமைகளாகவும், இழிவானவர்களாகவும் கட்டமைக்கப்பட்டனர். இங்கே காணப்பட வேண்டிய பிரதான அம்சம், இம்மண்ணில் பெரும்பகுதி மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்காகவே இழிவைச் சுமத்தினர் என்பதே. தாழ்வுணர்வு நிலையிலேயே பெரும்பகுதி மக்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே தீண்டாமை, பாராமை, அணுகாமை என்கிற வடிவங்களில் பாகுபாடுகள் திணிக்கப்பட்டன. இந்தப் பாகுபாடுகள் மட்டும் தான் சாதிமுறையின் ஒரேயொரு பிரச்சினை என உணர்ந்து கொள்ளப்படுகிறது. ஆனால் இந்தப் பாகுபாட்டினால் பொதுவெளிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. கல்வி, வேலை, விளையாட்டு, கலை மற்றும் இதர பொது உரிமைகளான கோவில், ஊர், நிர்வாகம் உள்ளிட்ட எல்லாவற்றிலிருந்தும் புறக்கணிக்கப்பட்டார்கள். கல்வி பெறுவதில் ஏற்படுத்தப்பட்ட தடை தலைமுறை தலைமுறையாகப் பஞ்சம, சூத்திர மக்களைப் பாதித்தது. விவசாயம் சார்ந்த கூலியுழைப்பும், மேல்தட்டினர்க்குத் தொண்டூழியமும் பஞ்சமர்களின் பணி என்றானது.
பஞ்சமர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிற இன்றைய பிற்படுத்தப்பட்ட சாதிகளான சூத்திரச் சாதியினர் ஏறக்குறைய தலித்துகள் போலவே நடத்தப்பட்டார்கள். அவர்களுக்கும் கல்வி பெறும் உரிமை முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டிருந்தது. உடல் உழைப்பை விற்று வாழ வேண்டிய நிலைமையில்தான் பிற்படுத்தப்பட்ட சாதியினர் இந்தியச் சாதி அடுக்கு முறையில் வைக்கப்பட்டிருந்தார்கள். மட்டுமல்லாமல் இன்றைய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சார்ந்த மக்களில் ஒரு பகுதியினர் பிறவியிலேயே குற்றம் செய்பவர்கள் என்று வகைப்படுத்தும் விதமாகக் “குற்றப்பரம்பரையினர்” என்று முத்திரை குத்தப்பட்டனர். அவர்கள் இரவு நேரங்களில் காவல் நிலையங்களிலும் சபை கூடும் இடங்களிலும்தான் தங்கியிருக்க வேண்டும். எனவே, ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் மிகப்பெரும் பகுதியினர் ஏதோ ஒரு வகையில் ஒதுக்கப்பட்டிருந்தனர். அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தின என்பதற்குக் கல்வி ஒரு உதாரணம். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட விவரங்களின்படி 1918 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர்கள் 17,432 பேர். இவர்களில் 11,921 பேர் பிராமணர்கள், எஞ்சிய 5511 பேர் மட்டுமே தமிழகத்தில் உள்ள மற்ற எல்லாச் சாதிகளையும் சார்ந்தவர்கள். இதனைப் பிரதிபலிக்கும் விதமாகவே வேலை வாய்ப்பும் ஒரு பகுதியினருக்கே கிடைத்தது.1917 ஆம் ஆண்டு தலைமைச் செயலகம், சென்னை ஆட்சியர் அலுவலகம், வருவாய் வாரியம் ஆகிய முக்கிய அலுவலகங்களில் ரூபாய் 50 முதல் ரூபாய் 499 வரை ஊதியம் ஈட்டும் 331 மொத்தப் பணியிடங்களில் 214 பணியிடங்கள் பிராமணர்களால் நிரப்பப்பட்டிருந்தன. 500 ரூபாய்க்கு அதிகமாக ஊதியம் ஈட்டும் உயர்பதவிகளில் ஒரு பிராமணர் அல்லாத இந்துவையும் பார்க்கமுடியவில்லை. 27 இடங்களில் 18 பிரிட்டிஷார்கள், 2 இந்தியக் கிறிஸ்தவர்கள், மற்ற 7 இடங்கள் பிராமணர்கள் என்ற முறையில் வழங்கப்பட்டிருந்தன. மற்றொரு உதாரணமாகப் பிராமண அலுவலரான கிருஷ்ணா ராவ் என்பவர் தன்னுடையச் சொந்தக்காரர்களான 116 பேரைப் பணியில் நியமித்திருந்தார். மொத்த பணி இடங்களோ 118 தான். மீதமிரண்டு இடங்களிலும் இவரைப்போலவே வேறு ஊரின் நிர்வாகம் முழுவதையும் கைப்பற்றிய குடும்பத்தைச் சார்ந்தவர்களே நிரப்பியிருந்தனர். நில உரிமைகளும் ஏறக்குறைய இத்தகைய குடும்பங்களின் கையிலேயே இருந்தன. இவ்வாறான சாதிரீதியான அநீதிகள் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் நடந்ததவையல்ல. இந்த மனுதர்மமே அரசநீதியாக இந்தியாவில் நீண்ட நெடுங்காலம் இருந்தது.
வரலாற்றில் இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு என்கிற சொல்லை அதன் முழுமையான அர்த்தத்தோடு உணர்ந்து கொள்ள வேண்டும். அன்றும் இன்றும் மிகவும் சர்ச்சைக்குரியதாக இட ஒதுக்கீடு என்கிற வார்த்தை இருக்கிறது. சாதியின் அதர்ம இருளுக்கு எதிரான சமூகநீதிச் சுடரே இடஒதுக்கீடு. 100 சதவிகிதமும் ஒரு சாராருக்கு ஒதுக்கீடுச் செய்யப்பட்டிருந்த அல்லது அபகரிக்கப்பட்டிருந்த கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உடமைகளை மறுபங்கீடு செய்வதே இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீடு மட்டுமே எல்லாவற்றுக்குமான மாற்று என்று நாம் குறிப்பிடவில்லை. எனினும் இந்தியச் சமூகத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்கு மிகப் பிரதானமான காரணமாக இட ஒதுக்கீடு இருக்கிறது.
இந்திய வரலாற்றில் இட ஒதுக்கீடு நீண்ட நெடிய வரலாற்றினைக் கொண்டது. 1800களில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் சாதி விவரங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரித்தானிய அரசு 1854-இல் தனது வருவாய்க் கழகம் மூலமாக மாவட்ட ஆட்சியர்களுக்கு, பணி நியமனங்களின்போது ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நியமனம் பெறுகிற சூழ்நிலைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியது. 1905 ஆம் ஆண்டு சாகு மகராஜ் அவர்கள் தன்னுடைய ஆட்சிப் பகுதியில் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தினார். ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி என்கிற முறையில் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் 1921 கம்யூனல் ஜீஓ என்கிற வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கிட வழிசெய்யும் அரசு ஆணை (G.O.No 613 தேதி 16.09.1921) பிறப்பிக்கப்பட்டது. விவாதங்கள், தடைகளுக்குப் பிறகு 1928 ஆண்டு முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நிரந்தரமாக்கப்பட்டது. அதன்படி 12 இடங்களைக் கொண்ட பணியிடங்கள் எனக் கொண்டால் அதில் 2 இடங்கள் பிராமணர்களுக்கு, 5 இடங்கள் பிராமணரல்லாத இந்துக்களுக்கு, 2 இடங்கள் இஸ்லாமியர்களுக்கு, 2 இடங்கள் ஆங்கிலோ இந்தியர் உள்ளிட்ட கிறிஸ்தவர்களுக்கு, 1 இடம் ஆதிதிராவிடர் மக்களுக்கு என்ற முறையில் இட ஒதுக்கீடு முறையை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கியது. இந்த இடஒதுக்கீடு சமமற்ற முறையில்தான் இருந்தது என்றாலும் முதல் முதலில் உடைப்பை ஏற்படுத்திய இடஒதுக்கீட்டுக் கொள்கை என்ற வகையில் போற்றுதலுக்குரியது.

தேச விடுதலையின்போது நமக்கான அரசியல் சாசனத்தின்படி இந்தியா முழுவதும் எஸ்சி/எஸ்டி மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கை சட்டபூர்வமாகச் செயல்பாட்டிற்கு வந்தது. இதே காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அம்பேத்கர் பெரிதும் முயற்சி எடுத்தார். “பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியல் அரசிடம் இல்லை. எனவே, பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அமைத்துப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் தயாரித்த பிறகு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு செய்யலாம் என்று அம்பேத்கருக்கு அப்போது பதிலளிக்கப்பட்டது. ஆனால், அரசியல் சாசனச்சட்டம் செயல்பாட்டுக்கு வந்து ஓராண்டிற்குப் பிறகும் கமிசன் அமைக்கப்படவில்லை. எனவே தான் இந்துப்பெண்கள் சட்டத் தொகுப்பை சட்டமாக்கிட மறுத்தது, பிற்படுத்தப்பட்டோருக்கான கமிஷன் அமைக்கப்படாதது ஆகிய இரண்டையும் கண்டித்து, தனது எதிர்ப்பை வலிமையாகப் பதிவு செய்திட 1951 செப்டம்பர் 27 அன்று அம்பேத்கர் தனது மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். இதற்கும் சில ஆண்டுகள் கடந்த பிறகே 1953 ஆம் ஆண்டு ஜனவரி 29 அன்று காகா காலேல்கர் தலைமையில் 11 பேர் கொண்ட பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அமைக்கப்பட்டது. காலேல்கர் கமிஷன் தனது அறிக்கையை 1955 மார்ச் 30 அன்று அளித்தது. எனினும் அன்றைய மத்திய அரசு காலேல்கர் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்த முன்வரவில்லை. அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. ஆனால் வாழ்க்கை எதார்த்தத்தில் இருந்து தொடர்ந்து எழுப்பப்பட்ட குரல்களும், அவ்வப்போது நடைபெற்ற போராட்டங்களும் கோரிக்கையை உயிர்ப்புடன் வைத்திருந்தது. எனவே, 1978 பிரதம மந்திரியாகத் திரு.மொரார்ஜி தேசாய் இருந்தபொழுது பி.பி.மண்டல் தலைமையில் மீண்டும் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி தன்னுடைய பரிந்துரையை 1980இல் அளித்தது. அதற்குள் அரசு கவிழ்க்கப்பட்டதால் மண்டல் பரிந்துரைகள் செயல்பாட்டிற்கு வரவில்லை. அதன் பிறகு திரு.வி.பி.சிங் அவர்களின் தலைமையிலான தேசிய முன்னணி அரசு 1990 ஆகஸ்ட் 7 அன்று இதர பிற்படுத்தப்பட்டோர்க்கு வேலைவாய்ப்பில் 27 சதவிகிதம் ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது. அப்போதும் இந்த இட ஒதுக்கீட்டினைச் சகிக்துக்கொள்ள முடியாமல் தேசிய முன்னணி அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவைப் பாஜக திரும்பப் பெற்றதால், வி.பி.சிங் அரசும் கவிழ்க்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கினால் நாங்கள் செருப்புத் தைக்கவா என வெட்கமற்று, இதயமற்று வடமாநிலப் பல்கலைக்கழக உயர்சாதி மாணவர்களே எதிர்த்தார்கள். உயர்சாதி மாணவர்களின் நிலை இதுவென்றால் மாணவிகளோ வேலையற்ற கணவர்கள் எங்களுக்கு வேண்டாம் என இட ஒதுக்கீட்டை எதிர்த்தார்கள். தகுதி, திறமை போன்ற விவாதங்கள் பெருமளவிற்கு நடைபெற்றன. நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவ்வழக்குகளின் மீதான தீர்ப்பில் 1993 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பில் மட்டுமே 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கிட நீதிமன்றம் வழிவகை செய்தது. கல்வியில் இடஒதுக்கீடு கானல் நீராய் போனது. பின்னர், 2006 இல் திரு.மன்மோகன்சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில்தான் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்யப்பட்டது. இங்கு குறிப்பிட வேண்டிய செய்தி என்னவெனில் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர முயன்ற அல்லது கொண்டுவந்த திரு.மொரார்ஜி தேசாய், திரு.வி.பி.சிங், திரு மன்மோகன்சிங் ஆகிய மூன்று அரசுகளுமே இடதுசாரிகளால் ஆதரிக்கப்பட்ட அரசுகளே.

இன்றும் தேவையா இட ஒதுக்கீடு ?
திரு.ஜவஹர்லால்நேரு கலந்து கொண்ட ஒரு விருந்தில் பரிமாறப்பட்ட இறைச்சியை என்ன இறைச்சி என்று நேரு கேட்டாராம். கோழியின் இறைச்சி என்று அவருக்குப் பதில் அளிக்கப்பட்டது. கோழி இறைச்சி போல் தெரியவில்லையே என்ற நேருவின் அடுத்த கேள்விக்கு, ஆம்! கொஞ்சம் குதிரை இறைச்சியையும் சேர்த்து இருக்கிறோம் என்று சொன்னார்களாம். என்ன விகிதத்தில் என நேரு கேட்க, ஒரு குதிரைக்கு ஒரு கோழி என்று பதில் சொன்னார்களாம். இன்றைக்கு இடஒதுக்கீடும் ஒரு குதிரைக்கு ஒரு கோழி என்ற அளவில்தான் செயல்படுத்தப்படுகிறது. அதுவும் உயர் பதவிகள் மற்றும் உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டு அளவிற்கும் நிரப்பப்பட்டதற்கும் பெரும் இடைவெளி தொடர்வதை விபரங்கள் தெரிவிக்கின்றன.
2008 நவம்பரில் மத்திய அரசு வெளியிட்டுள்ள மத்திய அரசு ஊழியர்களின் சமூகப் பொருளாதார நிலை அறிக்கையில் இருந்து ஒவ்வொரு துறையிலும் எத்தனை தலித்துகள் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர் என்பதையும் மத்திய அரசுத்துறைகளில் எந்தச் சமூகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது என்பதையும் அறியமுடிகிறது. மக்கள் தொகையில் 70 சதவீதமாக உள்ள பிற்படுத்தப்பட்டோர் தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மத்திய அரசில் துப்புரவு பணியைத் தவிர்த்து வெறும் 41.98 சதவிகிதம் வேலைவாய்ப்பு மட்டுமே பெற்று உள்ளனர். குறிப்பாக, அரசின் உயர்ந்த பதவியான நிலை-I பணியில் தலித்துகள் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முறையே 12.53%, 4.85% 5.44% உள்ளனர். நிலை-II பணியில் முறையே 14.89%, 5.70%, 3.69% உள்ளனர்.

2012ஆம் ஆண்டு EPW இதழில் வெளியான “Corporate Boards in India Blocked by Caste” என்னும் கட்டுரையிலிருந்து எந்தச் சமூகத்தின் கட்டுப்பாட்டில் கார்ப்பரேட்டுகள் இயங்குகின்றன என்பதை அறிய முடிகிறது. தேசியப் பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தை ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ள 4000 தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் போர்டு உறுப்பினர்களில் முதல் 1000 நிறுவனங்களின் போர்டு உறுப்பினர்களின் சாதி மற்றும் சமூகப் பொருளாதார நிலையை ஆய்வு செய்தது. அந்த விவரங்களின்படி ஆயிரம் கார்ப்பரேட் நிறுவனங்களில் 9052 போர்டு உறுப்பினர்களின் தகவலை வெளியிட்டது. அதில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 3.8% பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் 3.5%. எத்தனை அதிர்ச்சி தரும் விபரம் இது. இது தான் இன்னமும் இங்கே சமூகநீதியின் தன்மையாக இருக்கிறது. இன்று மிக முக்கியமான வேலை வாய்ப்பாக உருவாகி வருகிற தகவல் தொழில்நுட்பத் துறையின் விபரம் என்ன? பெங்களூரைச் சேர்ந்த National Institute of Advanced Studies 2008 இல் மேற்கொண்ட ஆய்வும் அதிர்ச்சி தகவலைத் தெரிவிக்கிறது. 132 தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் சமூக நிலையை ஆய்வு செய்ததில் அதில் 77 பேர் உயர் சாதியினராக இருந்தனர் என்பதே அந்த ஆய்வு. 2019 இல் The Print தருகிற விபரங்களில் இருந்து மத்திய அரசு அமைச்சரகங்களின் 275 இணைச் செயலாளர்களில் 13 பேர் (4.73%) எஸ்.சி, 9 பேர் (3.37%) எஸ்.டி, இதர பிற்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் கூட இல்லை. ஜனவரி 2015 நிலவரப்படி 40 அமைச்சரகங்கள் மற்றும் 48 துறைகளில் A,B,C,D பிரிவுகளில் மொத்தமுள்ள 79,483 ஊழியர்களில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 9,040 மட்டுமே. அதாவது 12% மட்டுமே. மத்திய அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் இதர பிற்படுத்தப்பட்டோர் 12.91%. மத்தியத் தேர்வாணயத்தில் 9%. உயர்கல்வித்துறையின் ஏ பிரிவில் 5%. அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறையில் 4%.
வேலைவாய்ப்பில் இது தான் நிலை என்றால் உயர்கல்வியில் என்னவாக இருக்கிறது என்று பார்ப்போம். 2020 இல் மத்திய தொழில்நுட்ப கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 23 இடங்களில் 14 இடங்கள் நிரப்பப்படவே இல்லை. மட்டுமல்ல தேசத்தில் உள்ள எந்த ஐ.ஐ.டி யும் இடஒதுக்கீட்டு இடங்களை முழுமையாக நிரப்புவதே இல்லை. இப்போதும் மத்திய அரசும், நீதிமன்றங்களும், மருத்துவப்படிப்பில் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டுதானே இருக்கின்றன. மருத்துவ முதுநிலை படிப்பில் 27% – த்தை மத்திய அரசு வேண்டுமென்றே செயல்படுத்தாமல் புறக்கணித்தது. 2019 இல் தமிழக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வியில் கிடைத்திருக்க வேண்டியது 2197 இடங்கள். ஆனால் கிடைத்ததோ வெறும் 224. சில ஆண்டுகளில் மட்டும் 10,000 இடங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இந்தியத்தேசம் உண்மையில் ஜனநாயகப்படுவதற்கு மேற்கண்ட இடைவெளிகள் நிரப்பப்படவேண்டும். இடஒதுக்கீடு என்பது நியாயமான மறுபங்கீடு என்பதை இந்தியச் சமூகம் எப்போது உணரும்?
இந்த பதிவை குறிப்பிடும் முறை:
பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு by சுபாஷினி சாமூவேல் is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
முகப்பு படம் குறிப்பிடும் முறை:
வி பி சிங் by அர்ஜுன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License.