பெருந்தொற்று, காலநிலை மாற்றம், நிலத்தடிநீர் உவர்நீராதல்… இவை எல்லாம் எப்படி நிகழ்ந்திருக்கின்றன என்று நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே வந்திருக்கிறது சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 (EIA 2020)

இது ஏற்கனவே இருந்த சூழலியல் தாக்க மதிப்பீடு (1994, 2006) -இல் மாற்றங்கள் கொண்டுவருவதாயுள்ளது. இந்த மாற்றங்கள் மேலும் வெளிப்படைத்தன்மையும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மேலும் வலுவையும் சேர்க்கும் என்று எதிர்பார்த்திருந்தபோது அப்படி எதுவுமில்லாமல் எதிர்மறையாக அமைந்துள்ளது. EIA 1994 என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986ன் கீழ் இயற்றப்பட்டதாகும். இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 என்பது போபால் விசவாயு கசிவு (1984)-க்கு பிறகு கொண்டுவரப்பட்டது.

EIA-வின் கீழ் திட்டங்கள் (projects) A மற்றும் B என வகைபடுத்தப்படுகிறது. இதில் B என்பது B1, B2 என்று அத்திட்டத்தின் ‘சமூக, சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் அதன் இடம்சார் நீட்சிக்கான சாத்தியங்களை’ வைத்து மேலும் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. A கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும், B1 க்கு சில ஆய்வுகளும் B2 க்கு ஆய்வுகள் ஏதும் இல்லாமலும் அனுமதி வழங்கப்படும். EIA 2020 B1, B2 வில் மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக B2 (ஆய்வின்றி அனுமதி வழங்கப்படும் திட்டங்கள்) -இல் 25 மெகாவாட்டுக்குக் குறைவான உற்பத்தித் திறனுடைய நீர்மின் ஆலைகள் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன (அதாவது ஆலை அமைக்க அனுமதி தேவையில்லை). ஏற்கனவே உள்ள EIA வில் ஏற்படும் சிறு மாற்றம் கூட விளிம்புநிலை மக்களைப் பெரும் அளவில் பாதிக்கத்தக்கதாய் இருக்கும்போது EIA 2020 பெரும் மாற்றங்கள் கொண்டுவருவதாயுள்ளது. ஆதிவாசிகள், மீனவர்கள், விவசாயிகள், கடற்கரைவாழ் மக்கள், மலைவாழ்மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

பிரகாஷ் ஜவடேகர், சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சர்.
(Photo by British High Commission, New Delhi is licensed under a Creative Commons Attribution 4.0 International License.)

EIA 2020 தேச முன்னேற்றம் என்ற பெயரில் தனியாருக்கு நிலங்களைக் கேள்விகள் இன்றி ஏலம் விடுவதற்கு ஏற்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. மக்கள் நலனை மையமாக வைத்து எந்த முடிவும் எடுக்கத் தேவையில்லை என்பது போலவும் நிலையான நீடித்த வளர்ச்சிக்கு எதிராகவும் அமைந்துள்ளது இது. மக்களிடம் கருத்து கேட்கும் முறை நீக்கம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கொள்கைகளைப் புறந்தள்ளுதல் போன்ற சனநாயகத்துக்கு விரோதமான விசயங்கள் பல இதிலுள்ளன. சமூக பொருளாதார படிநிலைகளில் நாம் எங்கிருந்தாலும் நாம் வாழும் சூழலில் பெரும் மாசும் அதனால் ஏற்படும் மாற்றமும் நம்மை ஏதோ ஒரு வகையில் பாதிக்கக்கூடியவை. பெருந்தொற்று நேரத்தில் தொழிற்சாலைகள் இயங்காமல் கழிவுகள் வெளியேறாமல், இயற்கையில் சமநிலை மெதுவாக மீண்டு வருவதை நாம் கண்முன்னே பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில் EIA 2020 இயற்றப்பட்டால் அதனால் ஏற்படப்போகும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை உயர்வினது பின்விளைவுகள் நாம் அனுமானிக்கக்கூடியதே. இந்த தொழிற்சாலைகள் மாசு ஏற்படுத்துவதோடு இயற்கைவளக் கொள்ளையிலும் ஈடுபட ஏதுவாய் உள்ளது EIA 2020. தொழிற்சாலைகள் மட்டுமல்லாது சிறுவர் விளையாட்டுப்பூங்காக்கள், ஆன்மீக நிறுவனங்கள் இயற்கை எழில்மிக்க இடங்களிலும் சுற்றுலா அதிகமுள்ள ஊர்களிலும் அமைக்கப்பட்டு நிலத்தடிநீரை வரம்பின்றி உறிஞ்சும் அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

முதலீடு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில் இயற்கை வளங்களைச் சுரண்டுவதைக் கண்ணை மூடிக்கொண்டு அனுமதிப்பது நாட்டின், நாட்டு மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும். தமிழ்நாட்டு அளவில் பார்த்தால் பல்லுயிரியம் அதிகமுள்ள மேற்குத் தொடர்ச்சிமலை, நீர்வளம் அதிகமுள்ள டெல்டா பகுதிகள் மற்றும் மீன்வளம், கோயில்காடுகள், வேடந்தாங்கல் போன்ற பறவைகள் சரணாலயங்கள் போன்றவை கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டப்படும். இத்தனை வருடங்களாக காற்று, நிலம், நீர் மாசுபாட்டைத் தடுக்க இயற்றப்பட்ட சட்டங்கள் நீர்த்துப்போகும் வாய்ப்பும் உள்ளது.

நிறுவனங்களின் விதிமீறல்களை மக்கள் வெளிபடுத்த முடியாது. நிறுவனங்கள் தாமே முன்வந்து வெளிப்படுத்த மட்டுமே EIA 2020 வழிசெய்துள்ளது. இதுவும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். 6 மாதங்களுக்கு ஒருமுறை விதிகளின்படி நிறுவனம் திட்டத்தை செயல்படுத்துகிறதா என அறிக்கை தரவேண்டும். இது வருடத்திற்கு ஒருமுறை தந்தால் போதுமானது என்று திருத்தப்பட்டுள்ளது. EIA 2020 வரைவு முழுவதுமே பெருநிறுவனங்களுக்கான முதலாளித்துவத்துக்கான வரைவாகவே இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் மாநில அரசு, நகராட்சி,ஊராட்சி போன்றவற்றுக்கு உரிமைகள் மறுக்கப்படும். வேடந்தாங்கலில் இயங்கிவரும் நிறுவனத்தால் அப்பகுதி நீரில் வேதிப்பொருட்கள் கலந்துள்ளதை ஆய்வின்மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த வேதிப்பொருட்கள் சூழலுக்கும் உயிரிகளுக்கும் பெரும் தீங்கு விளைவிப்பவை. தொடர்ந்து இதுபோன்ற சூழலியல் முக்கியத்துவம் பெற்ற பகுதிகளில் இயங்கிவரும் ஆலைகளால் வெளியிடப்படும் நச்சுப்பொருட்கள் நிலத்தை எதற்கும் உதவாததாக்கிவிடும். பல்லுயிரியம் பாதிக்கப்படும். பிறகு அப்பகுதியை பெருநிறுவனங்கள் எந்த எதிர்ப்புமின்றி ஆக்கிரமிக்கக்கூடும்.

ஏற்கனவே, குடியுரிமைச்சட்டம், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு போன்றவற்றுக்கு போராடிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு அதிர்ச்சியாக EIA 2020 வந்திருப்பது மக்களின்மீது எல்லா புறங்களிலிருந்தும் ஈட்டி பாய்ச்சுவது போலுள்ளது. EIA 2020 -ஐ எதிர்த்து குரல் கொடுத்துக்கொண்டிருந்த இணையதளங்கள் முடக்கப்படுவதும் இதன் அபாயங்களை மக்களுக்குப் புரியவைக்க இயங்கிங்கொண்டிருந்த செயல்பாட்டாளர்கள் பொதுவெளியில் மிரட்டப்படுவதும் நடந்துகொண்டிருக்கிறது. இது EIA 2020 மக்களின் நலன்களுக்கு எதிரான வரைவு என்பதை உறுதிபடுத்துவதாய் உள்ளது.

பெருந்தொற்று நேரத்தில் பாடத்திட்டத்தில் சில பகுதிகளை நீக்கியுள்ள அரசு சூழலியல் சார்ந்த பாடங்களையும் நீக்கியுள்ளது. சூழலியல் அறிவூட்டல் அதிகமாக தேவைப்படும் நேரத்தில் இவ்வாறு செய்திருப்பது ஏமாற்றம். பெருந்தொற்றால் கட்டாய ஊரடங்கு நடைமுறையில் வேளையில், சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவும் நேரத்தில் இந்த EIA 2020 -ஐ அவசரமாக நடைமுறைப்படுத்த முனைவது முரணாக உள்ளது.

மேலும், இந்த வரைவு மக்கள் மொழியில் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. திட்டங்கள் நடைமுறைபடுத்தப்படும் ஊர் மக்களை இது போன்றே அவர்களுக்குப் புரியாத தரவுகளையும், வரைவுகளையும் காண்பித்துக் குழப்பி அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் பார்த்துக்கொள்வதைப் பெருநிறுவனங்கள் செய்யத்தொடங்கும். இந்த வரைவு 83 பக்கங்கள் கொண்டது. இதனை அந்தந்த மாநில மொழிகளில், மக்களுக்கு எளிதில் புரியும் நடையில் மொழிபெயர்த்து விவாதம் செய்யவேண்டியது அவசியம்.

நீடித்த நிலைத்த வளர்ச்சியினை உறுதி செய்வதும், விலங்கின, தாவர இனப் பாதுகாப்பை உறுதி செய்வதும், இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுத்தலும், நாட்டு மக்களின் நலன் சார்ந்த திட்டங்களில் வெளிப்படைத்தன்மையோடு செயல்படுவதும் மத்திய மாநில அரசுகளின், அமைச்சகங்களின் கடமையாகும். இந்நேரத்தில் நாம் நமது எதிர்ப்பைப் பதிவு செய்யவேண்டியதும் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்துக்கு நம் எதிர்ப்பை தெரியப்படுத்தவேண்டியதும் (Article 51A (G) –இல் குறிப்பிடப்பட்டுள்ள) நம் கடமையாகும். EIA 2020 க்கு மக்கள் கருத்தைப் பதிவு செய்ய கொடுக்கப்பட்ட குறுகிய கால வரையறை டெல்லி உயர்நீதிமன்றத்தால் ஆகஸ்டு 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

EIA 2020 திரும்பப்பெறப்பட்டாலும் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும். வேறு வடிவில் சுரண்டலை அனுமதிக்க கொஞ்சம் கொஞ்சமாக வழிவகை செய்ய வாய்ப்புள்ளது. நாம் தொடர்ந்து சூழலியல் சார்ந்த விசயங்களில் செயல்பட்டுக்கொண்டே இருக்கவேண்டியது அவசியம். ஆராய்ச்சியாளர்களுக்கும் மக்களுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளிகள் குறைவது, தொழில்நுட்ப வளர்ச்சியால் நமக்கு இன்று சாத்தியப்பட்டிருக்கிறது. இதனை நாம் நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து இணைந்திருந்து விவாதங்களுக்கும் அதன் தொடர்ச்சியாக அறிவூட்டலுக்கும் வழிசெய்துகொள்ளவேண்டும். பள்ளியிலிருந்தே நமக்கு சூழலியல் அறிவின் முக்கியத்துவதை உணர்த்தும் வகையில் பாடத்திட்டத்தில் சூழலியலும் பேரிடர் மேலாண்மையும் முக்கியத்துவம் பெறவேண்டும். இனிவரும் காலங்களில் இவ்விரண்டும் அவசியம் என்பதை இந்த பெருந்தொற்று நிரூபித்துக்கொண்டுள்ளது.

முகப்பு படம்: scrapEIA2020 by சிபி நந்தன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License.

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020