வுஹானில் உள்ள ஒரு வைராலஜி நிறுவனம்தான் கொரோனா வைரஸைப் பரப்பியதாக வதந்திகள் பரவிக்கிடக்கின்றன. உண்மையில் வுஹானில் உள்ளது நமது பூனாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (National Institute of Virology, Pune, Maharashtra) போன்ற, உலகின் பல நாடுகளிலும் உள்ளது போன்ற வைரஸ் நுண்ணுயிரியை ஆராய்ச்சி செய்யும் ஒரு ஆராய்ச்சி நிறுவனமே. நமது பூனா தேசிய வைராலஜி நிறுவனத்தின் பெட்டகத்தில் நிபா, கொரோனா போன்ற மனிதனுக்கு நோயுண்டாக்கும் வைரஸ்களின் மாதிரி (specimen) உட்பட, அனைத்து வகையான வைரஸ் நுண்ணுயிரிகளின் மாதிரிகளும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் மனித சமுதாயத்திடமிருந்து அழித்தொழிக்கப்பட்ட அநேக வைரஸ்களின் மாதிரிகளும் இந்த சேமிப்புக் கிடங்கில் ஆராய்ச்சி நோக்கத்திற்காகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. வுஹானில் உள்ளதும் இதுபோன்ற ஒரு ஆராய்ச்சி நிறுவனம்தான், உயிர்-ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனம் அல்ல என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

எனினும், இந்த ஆராய்ச்சி நிறுவனத்தை உயிர்-ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தி இருக்கக்கூடும் எனும் சந்தேகம் எழலாம். டாக்டர் ஆண்டர்சன் தலைமையிலான அமெரிக்கப் பரிணாம மரபியல் மற்றும் உயிரியல் நிபுணர்குழு (Evolutionary genetics and biologists) மற்றும் பலர் இந்தச் சந்தேகத்தை வெறும் அனுமானங்களின் அடிப்படையில் அணுகாமல் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்தனர். அவர்களின் இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் நேட்சர் மெடிசன் (Nature Medicine) ஆராய்ச்சி இதழில் வெளியாகியுள்ளது.

தடுப்பூசி, மருந்துகள், ஆன்டிபாடி எனும் நோயெதிர்ப்புப் பொருள்(antibody) போன்ற ஆய்வுக்கு உதவும் நோக்கில் வைரஸின் மரபணு வரிசையை ஆய்வு செய்கின்றனர். நாவல் கொரோனா வைரஸின் மரபணு வரிசை தொடர்பான தகவல்களை சீனா தன்னகத்தே வைத்துக்கொள்ளாமல் இந்த வைரஸ் மனிதகுலத்திற்கு விளைவிக்கவிருக்கும் ஊறுகளின் சாத்தியங்களை மனதில் கொண்டு சில வாரங்களிலேயே அனைத்துத் தகவல்களையும் பொதுவில் வெளியிட்டது. தடுப்பூசி, மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சி நோக்கங்களுக்காக, மரபியல் பொருட்களை உலகின் எந்தப் பகுதியிலிருந்து வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்த வழிவகை செய்தது. இந்தக் கோவிட்-19 தொற்றுத் துவங்கிய காலம் முதலே உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் சீனாவிடமிருந்து கோவிட்-19 குறித்த தகவல்களைப் பெற்று வருவது மட்டுமல்லாமல் பலர் சீன விஞ்ஞானிகளுடன் சேர்ந்து ஆராய்ச்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.

சீனா கோவிட்-19 குறித்த தகவல்களை வெளியிட்டதன் (அவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியது, செய்தது) விளைவாக இந்தப் பெருந்தொற்றின் துவக்கம் முதலே பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகச் சாத்தியப்பட்டது. அதனால் இத்தாலி போன்ற பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளாலும் ஓரளவிற்காவது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. எனவே பெருந்தொற்றின் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாது கொரோனாவைப் பரவவிட்ட பொறுப்பற்ற நாடுகளின் தவறுகளுக்கு நிச்சயம் சீனாவைக் குறை கூற முடியாது. சொல்லப்போனால் உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆதரவில் தாங்கள் உருவாக்கிய சிகிச்சை நெறிமுறைகளையும் சீனா வெளியிட்டிருந்தது.

டாக்டர் ஆண்டர்சன் குழுவின் கண்டுபிடிப்புகள்:

டாக்டர் ஆண்டர்சன் குழு நாவல் கொரோனா வைரஸின் மரபணு-வரிசையை, மனிதர்களையும் வெளவால்கள், பாங்கோலின் எனப்படும் ஒருவகை எறும்புத்தின்னி போன்ற பிற விலங்குகளையும் பாதிக்கக்கூடிய பிற ஏழு வகை கொரோனா வைரஸ்களின் மரபணு-வரிசைகளுடன் ஒப்பிட்டு இரண்டு முக்கிய விசயங்களைக் கண்டறிந்தது.

Coronavirus replication

  1. மனிதர்களுக்கு மிகவும் ஆபத்து விளைவிக்கக் கூடிய சார்ஸ் மரபணுவுடன் குறைந்த அளவே நாவல் கொரோனா வைரஸ் ஒத்துப்போனது. பிற ஏழு மரபணுக்களில் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்காத வௌவால் மரபணுவுடன் தான் மிகக்கூடுதல் ஒற்றுமையைப் பெற்றுள்ளது. உயிர்-ஆயுதம் உருவாக்க விழையும் எவரும் இயல்பில் அதிக வீரியமுடைய ஒன்றை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்குவார்கள்; குறைந்த வீரியம் கொண்டதைக் கொண்டல்ல. அதாவது, உயிர் ஆயுத உருவாக்கத்தை ஒரு கத்தியினை வார்ப்பதோடு ஒப்பிட்டால், வீரியத்தில் குறைந்த கொரோனா வைரஸ் மரபணுவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கும் உயிர்-ஆயுதம் என்பது தகரத்தை வார்த்து செய்யப்படும் மழுங்கிய கத்திக்குச் சமம்.
  2. வைரஸ் ஏற்பிகள் (receptors) மனித ஏற்பிகளுடன் தங்களை இணைத்துக் கொள்வதை, பூட்டுடன் அதன் சாவி பொருந்திப் போவதைப் போன்று கற்பனை செய்து கொள்ளுங்கள். பூட்டுப் போட்டுப் பூட்டப்பட்டுள்ள மனித ஏற்பிகளில் திறக்க வல்ல சாவி போல நாவல் கொரோனா வைரசின் இணைப்புத்தளம் (binding ports), மனித ஏற்பிகளுடன் துல்லியமாக ஒத்துப்போகின்றது. இத்தகைய துல்லியம் இயற்கைத் தேர்வினால் மட்டுமே சாத்தியப்படும்; ஆய்வகங்களில் சாத்தியமில்லை. மேலும், ஏற்பிகளின் பிணைப்புகள் (binding) உறுதியாக இருக்கும்பொழுதிலும், அவற்றுக்கிடையிலான தொடர்பு உகந்ததாக (optimal interaction) இல்லை. ஒருவர் திறம்பட இந்த வைரஸை உருவாக்கி இருந்திருந்தால், நிச்சயமாக அவர் தொடர்பிற்கு உகந்த ஒன்றைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார்.நாவல் கொரோனா வைரஸின் மரபணுவினைவிடப் பிற வகை கொரோனாக்களின் மரபணுக்களே தொடர்பிற்கு உகந்ததாக இருக்கின்றன.

எனவே, இந்த நாவல் கொரோனா வைரஸ் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரஸாக இருக்க வாய்ப்பில்லை.

சீனாவுக்கு எதிரான இனவாதம்

நாவல் கொரோனாவைரஸ் சீனாவிலிருந்துதான் தோன்றியது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. இந்த வைரஸ் உலகின் எந்த மூலையிலிருந்தும் தோன்றி இருக்கலாம், தோன்றி விலங்குகளிடமிருந்து விலங்குகளுக்கும், பின்னர் மனிதர்களுக்கும் பரவி இருக்கலாம். பல்வேறு வகை கொரோனா வைரஸ்களின் பரிணாம வளர்ச்சியைத் தொகுத்துப் பார்த்து, ஒருவகை வௌவால்களில் வாழும் வேறு வகை கொரோனா வைரஸ் தான் பரிணமித்து மனிதர்களிடையே பரவியுள்ளது என ஒரு சமீபத்திய ஆய்வு உறுதி செய்துள்ளது. மேலும் நாவல் கொரோனா வைரஸில் ஏற்படும் திடிர் மாற்றம்- மியுடேஷன்-களை ஆராய்ச்சி செய்து முதல் தொற்று சுமார் அக்டோபர் முதல் டிசம்பர்க்குள் மனிதரிடம் பரவியது எனச் சுட்டுகிறது. இந்நிலையில் இந்த வைரஸின் தோற்றத்தைக் குறித்த புரளிகள் அர்த்தமற்றவை. அவற்றால் ஒரு பயனும் இல்லை. இந்த வைரஸின் பரிணாமத்தினைக் குறித்து முழுவதுமாக ஆய்வுகள் நடத்தவேண்டி இருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் அதைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

வுஹான் நகரின் அருகில் உள்ள கடல் உணவுச் சந்தைகளின் காரணமாக அந்நகரத்தில் மேற்கூறிய நிகழ்வுகள் நடப்பதற்கான அதிக சாத்தியம் இருக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை. ஆனால், இந்த சாத்தியம் உலகின் வேறு எந்த நகரங்களுக்கும், எந்த விலங்குகளுக்கும் பொருந்தும் என்பதுதான் நிதர்சனம். (பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் எனப் பல நாடுகளிலிருந்தும் தொற்றுகள் பரவிக்கொண்டு தானே இருக்கின்றன). சீனர்கள் மட்டுமல்ல, அனைத்து நாட்டினரும், இயற்கையுடனான நமது செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்து பார்க்க வேண்டும் என்பதை இனியேனும் உணர வேண்டும்.

இந்தியாவில் இலட்சக்கணக்கானோரைக் கொன்றுகுவித்த ஸ்பானிய காய்ச்சலின் நோய்க்கிருமி அமெரிக்காவில் தோன்றியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெயர்தான் ஸ்பானிய காய்ச்சலே ஒழிய, அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்திலுள்ள ஃபோர்ட் ரிலேயில் தான் வைரஸின் இந்த இனம் (strain) தோன்றியது என ஒரு அறிவியல் கோட்பாடு கூறுகிறது. முதல் உலகப்போரின் இறுதிக் காலகட்டத்தில் தோன்றிய இத்தொற்று விரைவில் பல நாடுகளுக்கும் பரவியது. முதல் உலகப்போரில் ஸ்பெயின் சார்பற்ற நிலைப்பாடு எடுத்ததால் அவர்களால் பிற நாடுகளை விட அதிகமான அளவில் பரிசோதனைகள் செய்து அதிக அளவிலான நோயாளிகளைக் கண்டறிய முடிந்தது. இதன் காரணமாகவே இக்காய்ச்சலிற்கு இந்தப் பெயர் தொற்றிக்கொண்டது.

இது ஆய்வகத்தில் உருவாக்கிய வைரஸ் அல்ல, இயற்கையாக உருவானது தான் என்பதை நிரூபிக்க ஏராளமான சான்றுகள் உள்ளபோதிலும், இனவாதத்தைத் தூண்டுவதற்கானக் கருவியாகக் கோவிட்-19-யைப் பயன்படுத்துவது பெரும் குற்றமாகும். அதேபோல் இறைச்சி உண்ணுவதால் இந்த நோய் உண்டாகும் என்பதற்கும் எந்தச் சான்றும் இல்லை. அதுமட்டுமல்லாமல், சமைக்கும்பொழுதே அநேக வைரஸ்கள் செத்தொழிகின்றன. எனவே எந்த உணவு கண்டும் அஞ்ச வேண்டியது இல்லை.

வைரஸ் பரவல்

பூனை குடும்பத்தில் புலி, பூனை, சிங்கம், வேங்கை என ஏராள வகைகளைக் கொண்டு விசாலமாக இருப்பது போல், கொரோனா குடும்பமும் விசாலமானது. சில கொரோனா, விலங்குகளை மட்டுமே பாதிக்கும்; மனிதர்களைத் தாக்காது (அதாவது மனிதர்களிடம் நோயை உண்டாக்காது). நாவல் கொரோனா வைரஸ் எனும் ஒரு கொரோனா வைரஸ் மனிதர்களிடம் தன்னை இணைத்துக் கொண்டு உயிர்பிழைக்கும் வகையில் தகவமைந்துள்ளது(அனேகமாக வௌவால் அல்லது பாங்கோலின்னிடமிருந்து இடையில் வேறு ஒரு உயிரினத்திற்குக் கடந்து பின்பு மனிதர்களை வந்தடைந்தபொழுது இந்தப் தகவமைப்பு ஏற்பட்டு இருக்கலாம். ). ஒரு வாதம் என்ன கூறுகிறது என்றால், நாவல் கொரோனா வைரஸ் மனிதர்களிடம் தன்னை இணைத்துக் கொண்ட துவக்க காலகட்டங்களில் சிலகாலம் வரை (அது சில ஆண்டுகளாகக் கூட இருந்திருக்கலாம்) மனிதர் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இருந்திருக்கலாம், பின்னர் நோய் ஏற்படுத்தும் வகையில் திடீர் மரபணு மாற்றம் வழி தகவமைத்து இருக்கலாம் என்கிறது. இந்த வாதத்தின்படி இந்த குறிப்பிட்ட வைரஸின் நோய்த்தொற்று வடிவம் மனித உடல்களில் பரிணமித்திருக்கிறது. மற்றொரு வாதம், விலங்குகளின் உடலில் இருக்கும் போதே மனிதர்களுக்கு நோய் ஏற்படுத்தும் கூறுகளை உருவாக்கிக்கொண்டிருக்கலாம், பின்னர் மனிதர்களைத் தொற்றி நோய் ஏற்படுத்தியிருக்கலாம் என்கிறது. நமக்கு நன்கு பரிச்சயமான சார்ஸ் (SARS) வைரஸ் இரண்டாம் வாதத்தின்படிதான் மனிதர்களுக்குத் தொற்றியது.

மேற்கூறிய இரண்டு வாதங்களில் எது சரியானது என்பதை இன்னும் நாம் அறிந்துகொள்ளவில்லை. ஒருவேளை கோவிட்-19 வைரஸ் நோய் உண்டாக்கும் கூறுகளை மனித உடலிற்குள் இருந்துகொண்டே வளர்த்துக்கொண்டு, நோய்த்தொற்று வைரசாக (virulent version) மரபணு மாற்றம் அடைந்திருந்தால், மீண்டும் இதேபோல் ஒரு நோய்த் தொற்றை ஏற்படுத்த வாய்ப்பில்லை. பரிணாமம் ஒரே போன்ற பாதையை மீண்டும் தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியம் மிகமிகக் குறைவு.

அதுவே, விலங்குகளுக்குள் இருக்கும் பொழுதே நோய் உண்டாக்கும் வைரசாகப் மரபணு மாற்றம் அடைந்து பின்பு மனிதர்களுக்குத் தாவி இருந்திருந்தால், இந்த நோய் வைரஸின் மூதாதை விலங்குகளுக்குள் வாழ்ந்து கொண்டே இருக்கும். அவை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் மனிதர்களைத் தாக்கும் வாய்ப்பிருக்கிறது. எனவே, மனிதர்களுக்குள் வந்து பின்பு நோய் உண்டாக்கும் வடிவம் பெற்றதா (இபோலாவை போல்) அல்லது விளங்குளுக்குள்ளேயே நோய் உண்டாக்கும் வடிவம் பெற்று மனிதர்களுக்குக் கடந்ததா (சார்ஸ் வைரஸ் போல்) எனும் ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

டெங்கு நோய் மனிதனிடமிருந்து ஒரு மனிதனுக்குத்தான் பரவுகின்றன என்றாலும் இடையே கொசுக்கள் வழியாகத்தான் கிருமி ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தாவுகிறது. நாவல் கொரோனாவைரஸ் மூக்கிலிருந்து வரும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. ஒரு தும்மலிலிருந்தே பெரும் அளவிலான வைரஸ்களைச் சுற்றுப்புறத்திற்குப் பரப்பிவிடுகிறது. தும்மலிலிருந்து வரும் நீர்த்துளிகள் கதவு, கைப்பிடி போன்ற பலதரப்பட்ட பரப்புகளில் படிகின்றன. நாம் அந்தப் பரப்புகளைத் தொடும்பொழுது, அங்கிருந்து அவை நமக்குத் தொற்றுகின்றன. மேலும், ஒரு பாதிக்கப்பட்ட நபர் வாயை மூடாமல் தும்மும்போதும் இருமும்போதும், நாம் ஒரு மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்கும் பட்சத்தில் அது நேரடியாக நமக்குக் கடக்கக்கூடும்.காற்றோற்றமற்ற அடைப்பான அறைகளில் அல்லது குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டு காற்று சலனம் இல்லாத இடங்களில் நோய் கிருமி உள்ளவர்கள் மற்றவர்களுக்கு காற்று மூலம் பரப்ப முடியும்.

இந்த வைரஸால் சுமார் 14 நாட்கள் தொற்று ஏற்பட்ட நபரின் உடலினுள் உயிர்வாழ முடியும். அதன் பின் அந்த நபரின் உடல் இந்த வைரஸை அழிப்பதற்கான ஆன்டிபாடி நோயெதிர்ப்புப் பொருள்களை உருவாக்கிவிடுவதால், அதற்கு மேல் அந்த வைரசால் இந்த உடலில் உயிர்வாழ முடியாமல் போகிறது. பொதுவாக ஒருமுறை தொற்று ஏற்பட்ட நபருக்கு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. குறைந்தபட்சம் சில ஆண்டுகளுக்காவது மீண்டும் தொற்று ஏற்படாமல் இருக்கும். எனவே, ஒரே நபரில் இந்த வைரஸால் நீண்ட நாள் வாழ முடியாது. இப்படி இருக்க இந்த வைரஸ் எப்படி அழிவிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறது என்ற கேள்வி எழலாம். இதற்கு இந்த வைரஸ் பயன்படுத்தும் உத்திதான் பிற வைரசைவிட இதை ஆபத்தானதாக்குகிறது. தொடர்ந்து புதிய புதியநோயாளிகளைச் சென்று பற்றிக்கொள்வதால் மலைப்பூட்டும் வேகத்தில் பரவி தன்னைத் தக்கவைத்துக் கொள்கிறது.

ஒவ்வொரு வைரஸிற்கும் தொற்றுவதற்கென பிரத்யேக பாங்கு உள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் 14 நாட்களுக்குள் சராசரியாக சுமார் 2.6 நபர்களுக்கு இந்த வைரஸைக் கடத்தக் கூடும். அதன்பிறகு, அந்த நபரால் இந்த வைரஸைத் தக்கவைத்துக் கொள்ளவோ கடத்திவிடவோ முடியாது.

இப்போது ஒரு கட்டுப்பாடற்ற சூழ்நிலையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்: ஒரு நபர் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த நபர் வைரஸை 2.6 நபர்களுக்குக் கடத்துகிறார், வேண்டாம் இரண்டு நபர் என்றே வைத்துக்கொள்வோம், இப்போது புதிதாக பாதிக்கப்பட்ட இந்த இருவரும் அதை மேலும் இரண்டு இரண்டு நபர்களுக்குக் கடத்துகின்றனர். ஆகமொத்தத்தில், 4 + 2 + 1 = 7 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நான்கு நபர்களும் அதை வேறு 8 நபர்களுக்கும், அந்த 8 நபர்கள் மற்றொரு 16 நபர்களுக்கும் பரப்புகின்றனர். இப்படியே 16-ஆவது முறை கடத்தல் நிகழ்ந்தால் 65,535 நபர்களுக்கு இத்தொற்றுப் பரவி இருக்கும். இதனை அதிவேகமான வளர்ச்சி (exponential growth) என்று குறிப்பிடுகிறோம்.

இந்த 16 சங்கிலித்தொடர் கடத்தல்கள் சில வாரங்களிலேயே நடந்தேறிவிட்டிருக்கும். இப்பொழுது 17-ஆவது கடத்தலை கணக்கிட்டுப் பாருங்கள், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,071 ஆக உயர்ந்திருக்கும். இதில் நிம்மதி தரக்கூடிய விடயம் என்னவெனில், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தீவிர உடல்நலக் கேடு விளைவதில்லை. பாதிக்கப்பட்டோரில் சுமார் 4.7% நபர்களுக்கு மட்டுமே மருத்துவக் கவனிப்புத் தேவைப்படும் அளவிற்கு உடல்நிலை பாதிக்கப்படுகின்றது. 131071-இல் 4.7% எவ்வளவு என்று கணக்கிட்டுப் பாருங்கள், 6160. அதாவது மேற்சொன்ன கணக்குப்படி 6160 நபர்களுக்கு மருத்துவக் கவனிப்புத் தேவைப்படும். இந்த எண்ணிக்கையும் ஒரே நாளில் இரட்டிப்பாகும். இந்த நிலைமை நீடித்தால், மருத்துவச் சேவைகள் அனைத்தும் திக்குமுக்காடிப் போய்விடும், சிகிச்சை அளிப்பதற்கான இடத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும். இது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொடர்பிலும் இவை அதிவேகமாக உயரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தப் போக்கைக் கட்டுப்படுத்தவேண்டும்; அதிவேகமாக மேல்நோக்கிப் போகும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை ஒரு ரேகைப்படத்தில் கூன் போன்ற மீள் நோக்கிய வளைவு கிடைக்கும். இந்த உயர்வு வளைவைத் (GROWTH CURVE) தட்டையாக்கவேண்டும்; குறைந்தபட்சம் உயர்ந்து கொண்டிருக்கும் எண்ணிக்கையில் வீழ்ச்சியினையாவது எட்டவேண்டும். சீனா, கொரியாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள், தனிமனித விலகல் எப்படித் தொற்றுப்பரவலைப் பெருமளவில் குறைந்திருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. வைரஸ் பரவாமலிருக்க நாம் அதன் சங்கிலித் தொடரை உடைக்க வேண்டும் (Break the Chain). இதைத் தனிமனித விலகல் மூலம், அதாவது வீட்டிற்குள்ளேயே இருப்பதன்மூலம் நம்மால் சாத்தியமாக்க முடியும்.

Covid-19 flatten the curve - cropped version (no cartoon)

வீட்டிலிருந்தபடி பணி: ஒரு சிறப்புரிமை

நாம் உயிர்வாழ பணிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கின்றது. வீட்டிலிருந்தபடியே பணிபுரியும் பேறு அனைவருக்கும் வாய்ப்பதில்லையே! இது போன்ற பேரிடர் காலங்களிலும் ஏழைமக்களே பெரிதும் பாதிப்படைகின்றனர். இந்தத் துயரிலும் பயணித்து வாழ்க்கை நடத்த வேண்டிய நிலைமை, அவர்களை மேலும் வைரஸ் தொற்றை நெருங்குவதற்கான சாத்தியங்களை அதிகப்படுத்துகிறது. இதை மனிதத் தன்மையற்ற நிலை என்று கூறாமல் வேறு எவ்வாறு கூறுவது. அவர்களின் வருமானத்திற்கு வழிசெய்யாமல், பணி நீக்கம் செய்வது பொறுக்க முடியாத துயர். காரணம், சுகாதார வசதி என்பது வருமானத்தைப் பொறுத்தே உள்ளது என்பதைப் பல ஆய்வுகள் கூறுகின்றன. நோய்த் தொற்றுப் பாரபட்சமின்றி எல்லாரையும் பாதிக்கும்பொழுது, சுகாதாரம் மட்டும் வசதிக்கேற்ப இருப்பது எந்த விதத்தில் நியாயம். அனைவருக்கும் சமமான சுகாதார வசதியினை உறுதி செய்வதன் மூலமே நம் முழு சமூகத்தையும் காக்க முடியும் என்பதுதான் முகத்திலறையும் உண்மை.


corona refugees on 538 kilometre journey by Satyaprakash Pandey is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Based on a work at https://ruralindiaonline.org/articles/corona-refugees-on-538-kilometre-journey/.

கேரளா மாதிரி

அனைவருக்குமான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வது உள்பட, கேரள மாநிலத்தில் கோவிட்-19-ஐ எதிர்த்துப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தினக்கூலி தொழிலாளர்கள் நலன், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு அத்திவாசியப் பொருட்களை வழங்குவது, முறையான சோதனைகள், மீட்பு வசதிகள், பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டம் தொடருதல், தொற்றுச் சங்கிலியை உடைப்பதற்கான கை கழுவும் வசதி போன்ற மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்வதற்குக் கேரள அரசு பெரும் தொகையை ஒதுக்கி உள்ளது.
மாட்டின் மூத்திரம் பருகி அல்லது யோகா செய்து கொரோனாவை ஒழிப்பது போன்ற மூடப் பிரச்சாரத்திற்காகவும், ஆடம்பர சிலைகள் செய்து வைப்பது, மத விழாக்களை நடத்துவது போன்ற அனாவசிய செலவுகளுக்காகவும் மக்கள் வரிப்பணத்தைச் செலவிடாமல் முன்மாதிரியான பல முன்னெடுப்புகளைக் கேரளா அரசு செயல்படுத்திக்கொண்டு வருகிறது. இதனைப் பிற மாநிலங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.

(வந்தனா ஆர்.வி, ஜெர்மனியின் ஷெல்ஸ்விக்-ஹால்ஸ்டீன் எனும் இடத்திலுள்ள, மேக்ஸ் பிளாங்க் பரிணாம உயிரியல் நிறுவனத்தில் (Max Planck Institute for Evolutionary Biology) பணிபுரிகிறார். இக்கட்டுரை student struggl-ல் கடந்த மார்ச் மதம் “Is COVID-19 a Chinese bio-weapon?” தலைப்பைக் கொண்டு வெளியான கட்டுரையின் தமிழாக்கம் ஆகும்.)

Creative Commons License
கோவிட் -19 சீனாவின் உயிர் ஆயுதமா? by ஆர் வி வந்தனா is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Based on a work at https://studentstruggle.in/is-covid-19-a-chinese-bio-weapon/.