கரும்பலகை.in குறித்து

இன்று, தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நமக்குப் பல சாத்தியங்களைத் திறந்து விட்டிருக்கிறது. குறிப்பாகத் தகவல்-தொழில் நுட்பத்தின் வளர்ச்சியும், அதனைத் தொடர்ந்த பரவலான சமூகஊடகங்களின் பயன்பாடும் சேர்ந்து, மக்கள் தகவல்களை நுகரும் தன்மையைப் புரட்டிப் போட்டிருக்கின்றன. அதிகாரவர்க்கத்திடமும் பெரு நிறுவனங்களிடமும் சிக்கிக்கொண்டிருந்த ஊடகம், இன்று சாமானிய மக்களின் கைகளுக்கும் எட்டியிருக்கிறது. அதாவது, தகவல் நுகர்வோராக மட்டுமே இருந்த சாமானியரால், இன்று தகவல்களை உற்பத்தியும் செய்யமுடிகின்றன. மானுட முன்னேற்றத்தின் ஒவ்வொரு படியிலும் ஆதிக்கவர்க்கமானது, இந்த வளர்ச்சிகளைத் தனது அதிகாரத்திற்கான கருவிகளாகப் பயன்படுத்தத் தவறியதில்லை. தகவல்-தொழில் நுட்பத்திலும் இது பொய்த்துப் போய்விடவில்லை. இத்தொழிநுட்பங்கள், மக்களுக்குத் தாராளமான மேடை அமைத்துக் கொடுத்துள்ளது என்று காட்சியளித்தாலும், இந்த மேடைகளிலும் அதிகாரவர்க்கத்தினரே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பதே உண்மையாகும். பல நூற்றாண்டு அறிவின் பயனாகவும், மக்கள்-அரசியல் இயக்கங்களின் முயற்சிகளாலும் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கும் மானுடச் சமூகத்திடம், வரலாற்றுத் திரிபுகள் மூலமாகவும், சாதி, மத, இன அடிப்படைவாதங்களை முன்வைத்தும் மானுட சமூகத்தைப் பின்னோக்கி இழுக்கும் தீவிர முயற்சிகள் பரவலாக நிகழ்ந்து கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகின்றது. இவை போன்ற அனைத்து முயற்சிகளுக்கும் நவீன ஊடகங்களே வலிமையான கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இணையம் துவங்கி இன்ன பிற ஊடகங்களில் குவிந்துக் கிடக்கும் பிற்போக்குத் தகவல்களும், வெறுப்புப் பேச்சுகளும் (hatred content), போலிச் செய்திகளுமே (Fake news) இதற்கு சான்று. நடுநிலை பேசிக்கொண்டிருக்கும் பெருங்கூட்டங்களோ தன்னியல்பாக ஆதிக்கச் சக்திகளின் கதையாடல்களைத்தான் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

ஆதிக்கத்தின் தன்மைக்கேற்ப மக்களின் எதிர்ப்பு வடிவங்களும் காலந்தோறும் மாறி வருவதை நாம் வரலாற்றுகளில் காண்கின்றோம். எனவே, தகவல்-தொழில் நுட்பத்தை நமக்கான ஆயுதங்களாக மாற்றுவது என்பது நமது விருப்பத்திற்கு உட்பட்டது மட்டுமல்ல, அது ஒரு வரலாற்றுக் கடமையும் கூட. இவை இதுவரை பேசப்படாத விஷயம் ஒன்றுமில்லை, இதற்கான பல முயற்சிகள் நடந்தேறியும் உள்ளன. மையநீரோட்ட ஊடகங்கள் துவங்கி, சிறுபத்திரிகைகள், வலைப்பூக்கள், இணைய இதழ்கள், இணையதளங்கள், திரைப்படங்கள், குறும்படங்கள் எனப் பல தளங்களிலும் இது போன்ற முயற்சிகள் நடந்தேறி  இருக்கின்றன; பல முயற்சிகள் வெற்றியும் கண்டிருக்கின்றன. இதுவரை நடைபெற்ற முயற்சிகள் போதுமானதாக இல்லை என்பது தான் நிலவரம். இந்த புள்ளியில் தான் கரும்பலகை.in-இன் தேவை துவங்குகிறது.

மக்கள் விரோத சக்திகள் அனைத்து தளங்களிலும் ஊடுருவியுள்ள இந்த நிலையில் அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருந்தாலும், பங்கேற்பாளர்கள் மற்றும் பொருளாதாரப் பற்றாக்குறையின் காரணமாக, தற்சமயம் கல்வித் தளங்களில்  மட்டும் சிறப்புக் கவனம் செலுத்த கரும்பலகை.in- இன் ஆசிரியர்குழு தீர்மானித்துள்ளது. விரைவில் அனைத்துத் தளங்களிலும் சிறப்புக் கவனத்தை விரிவாக்கவும் திட்டமிட்டுள்ளது. எனவே கல்வி, கற்றல்-கற்பிப்புக்கலை, மாணவர் உரிமை, ஆசிரியர் உரிமை, கல்வி நிலைய-வளாக அரசியல், கல்வியாளர்கள், கல்விச் சிந்தனைகள், கல்விக்கொள்கைகள், சர்வதேச கல்வி மாதிரிகள் எனக் கல்வி சார்ந்த புலங்களில் சிறப்புக் கவனமும் அரசியல், சமூகம், கலாச்சாரம், அறிவியல் போன்ற இன்ன பிற தளங்களில் பொதுவான கவனமும் செலுத்தப்படும்.

கரும்பலகை.in- அடிப்படையில் மக்களின் ஊடகம். மக்களின் பங்களிப்பைக் கொண்டு இயங்கும் இணைய இதழ். அனுபவக் கட்டுரை, ஆராய்ச்சி, அரசியல்-சமூகம்-பொருளாதாரம் சார்ந்த கட்டுரை, கதை, கவிதை, பாடல், புத்தக விமர்சனம், பயணக்கட்டுரை, மொழிபெயர்ப்புகள், குறும்படம், ஆவணப்படம், நிழற்படக் கதைகள், ஓவியம், கருத்துச்சித்திரம் என எந்த வடிவத்திலும் பங்களிக்கலாம். கரும்பலகை.in- ஆசிரியர்குழு கொள்கைகளுக்கு உட்படும் பட்சத்தில் வலைத்தளத்தில் பதிவிடப்படும். கரும்பலகை.in -இல் பதிவேற்றப்படும் அனைத்துப் பதிவுகளும் (குறிப்பிடப்படாத பட்சத்தில்) படைப்பாக்கப் பொதுமங்களின் (creative commons) கீழ் பதிவிடப்படும். இங்கு பதிப்பிக்கப்படும் பதிவுகளைப் பொருள் மாறாமல் பயன்படுத்திக்கொள்ளலாம், பகிர்ந்துகொள்ளலாம். நன்றி. இணைந்து பயணிப்போம்.

  • ஆசிரியர் குழு