ஆசிரியரைப் பற்றி
இந்நூலின் ஆசிரியர் சனல் இடமருகு ஆவார். 1955-ஆம் ஆண்டு கேரள மாநிலம் தொடுபுழையில் பிறந்தார். ஜோசப் இடமருகு ஸோளி இணையருக்கு மகன் ஆவார். 1977-இல் காரியவட்டம் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பட்டமும் புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில். பட்டமும் பெற்றார். வேதங்கள் ஓர் ஆய்வு என்னும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் த. அமலா. இந்நூலிலின் கீழ் பத்துத் தலைப்புகள் இடம்பெற்றுள்ளன.
வேதங்கள்: வரலாற்று முக்கியத்துவமும் காலமும்
வேதங்கள் என்பது ரிக்வேதம், யஜூர்வேதம், சாமவேதம், அதர்வவேதம் என நால்வகைப்படும். இவ்வேதங்களில் கூறப்படும் செய்திகள் யாவுமே பழைய ஆரியர்களின் வரலாற்றுப் பொக்கிசங்களையினையே பெரிதும் விளக்குபவையாக உள்ளன. வேதங்கள் அறிவின் பாதுகாப்பு மையமும், விஞ்ஞானத்தின் எல்லாப் பகுதிகளின் உற்பத்தி ஸ்தானமும் ஆகும். நான்கு வேதங்களிலும் 20358 ஸ்லோகங்கள் உள்ளன.
ரிக் வேதம் | 10522 |
யஜூர் வேதம் | 1984 |
சாம வேதம் | 1875 |
அதர்வ வேதம் | 5977 |
ரிக் வேதம்
பல கடவுள்களைப் போற்றிப் புகழும் பாடல்களாகிய சூக்தங்களின் ஒன்றிணைப்பே ரிக் வேதமாகும். ரிக் வேதத்தில் தஸ்யூக்களை வெற்றிகொள்ள (இந்திரனை உதவிக்காக அழைக்கும்) பிரார்த்திக்கும் பல ஸ்லோகங்கள் காணப்படுகின்றன.
யஜூர் வேதம்
யாகச் சடங்குகளுக்கான வேதமே யஜூர் வேதம். யஜூர் வேதம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை, சுக்லா யஜூர் வேதம் (சுத்தமான வெண்மை நிறமுள்ள வேதம்) மற்றும் கிருஷ்ண யஜூர் வேதம் (இருண்ட, கருத்த யஜூர் வேதம்) என்பனவாகும்.
சாம வேதம்
சாம வேதம் என்பது நேரடியாக ரிக் வேதத்திலிருந்து எடுத்தவையாகும். இவைகளில் வேள்விக்கான மந்திரங்களே பெரிதும் காணப்படுகின்றன.
அதர்வ வேதம்
அதர்வ வேதத்தின் முக்கிய பாடம் மந்திரவாதம்தான். பயந்தவற்றைக் கட்டுப்படுத்தும் சூக்தங்களும் காணப்படுகின்றன. பகைவர் அழிவு, போர் வெற்றி, கருவுறுதல், ஐஸ்வர்யம் போன்றவைகள் அதர்வ வேதத்தில் காணப்படும் விஷயமாகும்.
வேத காலக்கட்டம்
வேதக் காலக்கட்டத்தை வரலாற்றுச் சான்றுகளின் வழி ஆராய்தலுக்குக் கி.பி.400-ஆம் ஆண்டில் வாழ்ந்த ஸாயணாச்சரியாரைக்கொண்டு (ரிக் வேதத்தினை எழுத்துவடிவில் கொண்டுவந்தவர்) முன்பிருந்த விளக்கவுரைகளைப் பற்றிய குறிப்புகளைக் காண முடிகின்றன. ஹரப்பா வாசிகள் நாகரிகத்தில் சிறந்தவர்கள் என்றும் அவர்களை அழித்து அந்த இடத்தை ஆரியர்கள் கைக்கொண்டனர் என்ற குறிப்பும் வேதத்தில் காணப்படுகிறது. இதனடிப்படையிலும் மொகஞ்சதாரோவில் கிடைக்கும் தடயங்களின் அடிப்படையிலும் கி.மு.1500-ல் பஞ்சநதம் தாண்டியுள்ள ரூபார் போன்ற பகுதிகளில் ஹரப்ப நாகரிகம் அழிந்தது என்கின்ற அடிப்படையிலும் ஆரியர்கள் பாரதத்தில் புகுந்தது கி.மு 2500 எனத் தெரியவருகிறது.
வேத காலக்கட்டத்தில் தேவர்களும் அசுரர்களும்
தீயையும், மழையையும், காற்றையும், பார்த்துப் பயந்த மனிதன் அவற்றை ஸ்தோத்திரங்கள் மூலம் தன் வசமாக்கும் பணியில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் அவற்றிற்கு மனித உருவமும் கொடுத்தான். உதவியாகத் தோன்றியவற்றை உறவாகவும், பிரச்சனை செய்தவைகளைப் பகைமையாகவும் பார்த்தான். கடவுள் என்பது அவர்கள் தன்வசப்படுத்த உள்ளவர்களாகவும், சோம பாணமோ, ஹவிஸோ கொடுத்தால் விரும்பியவர்களுக்கு நியாய அநியாயம் கருதாமல் உதவி செய்வார்கள் எனக் கருதினர். கொடியவர்களாகச் சித்தரிக்கப்படுபவர் எல்லாம் தீமைசெய்யக் கூடியவர்களாகவும் (இருள், வறட்சி, பயிர் அழிவு) இவற்றைப் போக்கும் பொருட்டு மழை, ஒலி இருப்பதால் இரண்டிற்கும் இரு வேறு வடிவம் கொடுத்தனர். வேதத்தில் இவ்வுலகை மூவிடமாகக் கூறப்படுவதாவது சொர்க்கம், மத்திய ஆகாயம், பூமி. இவ்விடங்களில் 33 கடவுளர் இருந்து பிற்காலத்தில் இதுவே 33 கோடியாக உருப்பெற்றது.
வருணன்
ரிக் வேதத்தில் வருணன் சக்தி வாய்ந்த தேவனாகக் கூறப்பட்டுள்ளது. பின் அதர்வ வேதத்தில் வலிமை குன்றிய தேவனாகக் காணப்படுகிறான். (இதற்குத் தஸ்யூக்களுடன் நடந்த சண்டையில் அடைக்கலம் தேடி வந்தவர்களுக்குப் போர் செய்ய இந்திரன் தயாரானதே காரணம் என்று கே.எம்.பணிக்கர் குறிப்பிடுகிறார்).
இந்திரன்
இந்திரன் போர் விஷயங்களில் ஆர்வம் காட்டியதுடன் ஆரிய பாதுகாவலனாகச் செயல்படவும் செய்தார்.
அக்னி
அக்னி என்பது சொர்க்கத்தில் சூரியனின் மிகுந்த ஒலியாகவும், ஆகாயத்தில் மின்னலாகவும், பூமியில் எரிகின்ற தீயுமாகவும் கண்டனர். அக்னி தேவர்களுக்கும் கடவுளுக்கும் சேரவேண்டியதைக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டார் என்று கூறுப்பிடுகின்றன.
உஷஸ்
உஷஸ்(பெண் தெய்வம்) என்பது அதிகாலைத் தெய்வமாகும். இது காமுரு தெய்வமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அஸ்வினிகள்
ஒலிக்கு அதிபதிகளானவர்கள். பிற்காலத்தில் தாம்பத்திய வாழ்க்கைக்கும், தாம்பத்திய சுகம் ஆகியவற்றின் பாதுகாவலராகவும் கற்பனை விரிந்தது.
சோமன்
சோமரசத்தைக் கடவுளாகச் சித்தரிக்கின்றதைத் வேதங்கள் முழுதும் காணமுடிகிறது. சோமத்தால் உண்டாகும் மயக்க நிலையைத் திவ்ய அனுபூதியாகவும் பலருக்குக் கிடைக்க இயலாத உள்முக தரிசனமாகவும் கொள்கின்றன.
ருத நம்பிக்கை
பொருள்களின் ’கதி’ என்னும் பொருள்படும் சொல்லே ருதம் ஆகும். உலகில் எல்லாம் நிச்சயிக்கப்பட்ட பாதையின் வழியாகவே செயல்படுகிறது, கடவுளும் அவ்வாறே என்றும் சிலர் எண்ண ஆரம்பித்தனர். இயற்கை சக்திகளோடு எதிர்த்துப் போராடதெரியாத மனிதன் அவற்றை வித்தைகள் மூலமும், மந்திரத் தந்திரங்கள் மூலமும் அடக்கி ஆள முடியும் என எண்ணினான்.
சோமரசம் – சுராபானம் – வேதங்கள்
வேத காலக்கட்டத்தில் முக்கிய போதை பொருளாகச் சோமரசமும், சுராபானமும் விளங்கியது. கஞ்சாவே வேத காலத்தில் சோமமாகவும், ஒரு வகையான மது வகையே அக்காலத்தில் சுராபானமுமாக விளங்கியிருக்கிறது.
சோமம் என்ற செடி
தற்காலத்தில் “கஞ்சா” என்கின்ற பெயரில் விளங்கும் இச்செடியினையே வேத காலத்தில் “சோமம்” என்ற பதத்தைக் கொண்டு கூறியுள்ளன. சோமத்திலிருந்து பானம் தாயாரிப்பது என்பது புனிதமாகக் கட்டமைத்துள்ளன. வேத காலக்கட்டத்தில் ஆரியர்கள் சோமத்திற்கு (கஞ்சாவிற்கு) அடிமையாகியிருப்பதை இவற்றின் மூலம் காணமுடிகிறது.
சுராபானம்
வேதங்களில் கூறப்படும் சுரா ஒரு மது வகையைச் சார்ந்ததாகும். பார்ப்பனர்கள் சுராவைத் தவிர வேறு எந்த மது வகையினையும் குடிக்கக் கூடாது என்பது தர்மச் சூக்தத்தில் கூறப்பட்டிருக்கும் செய்தியாகும். இப்பானமானது தானியங்களை இடித்து கலக்கி புளிக்க வைத்து தயாரிக்கப்பட்ட பானமாகும்.
அமரத்தன்மையும் சோம ரசமும்
மரணம் மனிதனை அச்சுறுத்த செய்ததால் அழியாத தன்மையைக் (அமரத்துவம்) கைவரச்செய்யும் திவ்ய மூலிகையாகச் சோமத்தைக் காண்கின்றன.
வேதங்களில் யாகம்
சம்ஹிதைகளும் பிராமணங்களும் சேர்ந்த வேதங்களில், யஜூர் வேதமே யாகங்களைப் பற்றியும், யாகம் செய்கின்ற முறைகளைப் பற்றியும் விளக்குகின்றது. கடவுளை மகிழ்ச்சியுறச் செய்கின்ற பலி சம்பிரதாயத்தின் மற்றொரு வடிவமே யாகம். நெய்யைத் தீயில் இடுவது முதல் மனிதனை அக்னிகுண்டத்தில் தூக்கியெறிவது வரை யாகங்கள் நடைப்பெற்றுள்ளது. இதன் மூலம் ஆரியர்களின் ஆச்சாரங்களையும், ஆதிக்கத்தையும் வெளிப்படுத்துவனாக விளங்கியுள்ளது. யாகங்கள் நால்வகைப்படும். அவை, அஸ்வமேதம், கோமேதம், நரமேதம், ஸ்ர்வமேதம் என்பனவாகும்.
அஸ்வமேத யாகம்
அரசனின் அதிகாரத்தை விரிவு படுத்தவும், அரசியல், மதம் போன்றவை அங்கீகரிக்கப்படுவதற்கு நடத்தப்படுகின்ற யாகம் ஆகும். கரிய நிறக் குதிரையை அவிழ்த்துவிட்டு அக்குதிரை செல்லும் பகுதிகள் அனைத்தும் இம்மன்னனுக்கே உரிய இடமாக கருதினர். குதிரையைத் தடுக்கின்ற அரசனோடு போர் புரிந்து நாட்டைக் கைப்பற்றுவார்கள். எஜமானனின் மனைவியானவள், புரோகிதர்களோடும், எஜமானான சொந்த கணவனுடனும், நானூறுக்கு மேற்பட்ட பலதரப்பட்ட பெண்களோடும் சேர்ந்து கிழக்கு வாசல் வழியாக வரவேண்டும். எஜமானான அரசன் குதிரையைக் கொன்று வீழ்த்தி அதன் மேல் தன் மனைவியைக் கட்டிப்பிடித்துப் படுக்கும்படி கூறுவான். பின் இறந்த குதிரைக்கும் எஜமானான மனைவிக்கும் சம்போகம் நடைபெறும். இதன் மூலம் அரசியானவள் நான் கர்ப்பமடைய வேண்டும் என்கின்ற சுலோகத்தை உச்சரிக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் அரசனும், அரசியும், புரோகிதன் துதிக்கின்ற பல துதிப் பாடல்களைக் கூறி இறுதியாக அரசியைக் குதிரயின் மேலிருந்து எழுப்பி விடுவிக்கின்றன. யாகமானது அஸ்வத்தை (குதிரையை) அக்னியில் சுட்டெடுப்பதன் மூலம் முழுமைபெறுகிறது.
கோமேத(யாக)ம்
கோமேத யாகம் என்பது பசுவைக் கொன்று நெய் எடுத்து அதனை அக்னியிலிட்டு முன்னோர்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் யாகமாகும். இறைச்சியை யாகத்தில் ஈடுபட்டவர்கள் பங்கீட்டுக் கொள்வர்.
புருஷ மேதம்
மனிதர்களைக் கொன்று நடத்தப்படும் யாகமே புருஷ மேதம் என்று கூறப்படுகிறது. புருஷ மேதத்தின் சடங்குகள் பெருமளவில் அஸ்வ மேதத்தின் சடங்குகளோடு ஒத்திருக்கின்றன. பலியிடுகின்ற மனிதனின் ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அஸ்வ மேதத்தில் எவ்வாறு பட்டத்தரசி குதிரையோடு இணைந்தாளோ, அதனைப் போன்றே புருஷ மேதத்தில் பலியாகின்ற மனிதனோடு இணைவாள். அதன் பின் உலக நன்மைக்காக அம்மனிதரைப் புருஷ மேத யாகத்திற்காக அர்ப்பணிப்பார்கள்.
ஸர்வ மேதம்
ரிக் வேதத்தின் ஒரு பகுதி ஸர்வமேதம் என்ற யாகத்தைப் பற்றிக் கூறப்படுகின்றது. (விஸ்வகர்மா சொர்க்கலோகம் வேண்டி நடத்தப்பட்ட யாகம்). பிதாவும் புரோகிதனுமான விஸ்வகர்மா பொருட்களை எல்லாம் பலியாக்கிவிட்டுப் பின்னர் யாகம் நடத்தி தன்னைப் பலியாக்கிக் கொண்டார்.
உணவிற்காக யாக விலங்கு
புரோகிதர்கள் மாமிச உணவு உண்பதற்காக ஏற்படுத்திக் கொண்டதே யாகங்கள். இறைச்சிகள் எவ்வாறு பங்கீட்டுக் கொள்ளவேண்டும் என ஆத்ரேய பிராமணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை:
பிரஸ்தோர் | தாடை எலும்புகளும், நாக்கும் |
உத்கதா | இதயம் |
பிரதிஹர்த்தா | கழுத்தும், உள்நாக்கும் |
ஹோத | வலது இடுப்பின் கீழ்ப்பாகம் |
பிரம்மா | இடது பாகம் |
மைத்ர வருணன் | வலது தொடை |
பிராமண சாம்ஸி | இடது தொடை |
அத்வர்ய்யூவுக்கும் | தோலின் வலது பாகம் |
மந்திரம் சொல்வோர்க்கு | இடது பாகம் |
இவ்வாறு 36 பாகங்களாகப் பங்கீட்டுப் பின் அவர்கள் உண்டனர். வேத காலக் கட்டத்தில் ஆரியர்கள் மாமிச உணவுகளைக் குறிப்பாகப் பசு, காளைகளை உண்டன என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
வேதகால உறவுகள்
புனித நூல்களாகக் கொள்ளப் படுபவைகள் அனைத்திலும் உறவுமுறைகளைப் பற்றிய சிந்தனைகள் தலைகீழாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது. பைபிளிலுள்ள விஷயங்களை ‘ஜோசப் லெவிஸ்’ திறந்து காட்டுகிறார். குரானிலும் விஞ்ஞானத்திற்குப் புறம்பான ஏராளமான உலக உறவுகளின் கற்பனைகள் காணப்படுகிறது. வேதங்களிலோ சிறப்பாகக் கூறப்படுகின்ற ஏராளமான லவுகீக விமர்சனங்களுண்டு.நாகரிகத்தின் ஆரம்பக் கட்டத்திலுள்ள கற்கால மனிதனின் லவுகீக சங்கல்பங்களும், எண்ணங்களுமே வேதங்களில் காணமுடிகிறது. கற்காலச் சமுதாயம் முழுமையும் உடலுறவோடு தொடர்புடைய ஏராளமான மூட நம்பிக்கைகள் காணப்படுவதுடன் விலங்குகளுக்கு ஒப்பான வாழ்க்கை முறை நிலவியதைக் காணமுடிகிறது.
வேதங்களில் சமுதாய வாழ்க்கை
ஏராளமான மூட நம்பிக்கையினைக் கொண்டுள்ள வேதங்களில் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதனின் சமூகவாழ்க்கையினைப் பற்றியும் நாகரிகச் சிந்தனைகளைப் பற்றிய குறிப்புகளும் வேதங்களில் காணப்படுகிறது. வேட்டையாடிய மனிதன் இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட இன்னல்களுக்கு ஆளாக்கப் பட்டான். வேட்டையாடுவதை விட உணவு சம்பாதிக்கும் வழிகளை ஆராய்ந்து விலங்குகளைத் தன் வசப்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றமடைந்தான். கல்லினால் சிறிய மண்வெட்டிகளும், கோடாரிகளும், அரிவாள்களும் செய்யப்பட்டன.
நிரந்தரப் போர்கள்
செல்வத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் ஆரியர்கள் போர் புரிந்தனர் என்பதற்கு ரிக் வேதத்தில் ஏராளமான சூக்தங்கள் உள்ளன. தஸ்யூக்கள் யாகங்கள் செய்யவில்லை என்றும் அவர்களது நம்பிக்கைகளும் ஆசாரங்களும் வித்தியாசமானவையே என்றும் ஆரியர்கள் இந்திரனிடம் கூறுகின்றனர். நூற்றாண்டுகளாக நடைபெற்ற போரில் தஸ்யூக்கள் தோல்வியுற்றனர். இவ்வாறு தஸ்யூக்களுக்கும் ஆரியர்களுக்கும் நிகழ்ந்த போர்களினால் தஸ்யூக்களே பெரிதும் பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டனர்.
உணவும் உடையும்
தஸ்யூக்கள் கருப்பு நிறமுடையவர்கள். ஆரியர்கள் வெண்மை நிறமுடையவர்களாகவும், வலது பக்கத்தில் குடுமி வைத்திருப்பவர்களாகவும் ரிக் வேதம் கூறுகிறது. ஆரியர்கள் உணவு விசயத்தில் சோமம் அருந்துவர்களாகவும் இறைச்சி (ஆடு, மாடு, குதிரை ஆகியவற்றை) உண்பவர்களாகவும் வேதத்தில் குறிப்பிடுகின்றன.
விவசாயமும் வணிகமும்
ஆரியர் வருகைக்கு முன்னரே ஹரப்பர்கள் விவசாயத்திலும், வணிகத்திலும் ஈடுப்பட்டுள்ளனர். பார்லி, கோதுமை, பேரிச்சை போன்றவைகளைப் பயிரிட்டனர். குறுகிய கொம்புகளையுடைய காளைகளையும், ஆடு, பன்றி, நாய், யானை, ஒட்டகம் போன்ற மிருகங்களையும் வளர்த்து வந்துள்ளனர். ஆரியர்கள் தஸ்யுக்களை வென்ற பிறகு அவர்களின் தொழில்முறையான விவசாயத்தையே பின்பற்றியிருக்க வேண்டும் என அறிஞர்கள் பலரும் கருதுவதாக இந்நூலாசிரியர் குறுப்பிடுகிறார்.
ஆட்சி முறை
கோத்திரங்களும், கணங்களும் ஒன்றுக்கொன்று மோதசெய்தன. பலம் பெற்ற கோத்திரங்கள், பலம் குறைந்த கணங்களைக் கீழடக்கவும் செய்தனர். ஆகையால் ஆரியர்களிடையே பிளவு ஏற்பட்டது. போரில் தோல்வியுற்ற மக்களை அடிமைகளாக்கினர். அடிமைகளினுடைய சொத்தும் நிலங்களும் அதிகாரத்திலுள்ளவர்களிடம் சென்றது.
குடும்ப பந்தங்கள்
திருமணம் அக்காலங்களில் இருந்தது என்றும், ஒருவனுக்கு ஏராளமான மனைவிகள் இருந்தனவென்றும் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. குடும்பப் பந்தத்தில் பெண்களுக்கு மதிப்போ, சமத்துவமோ அளிக்கபடவில்லை. ஆணின் அடிமையாகவே சித்தரிக்கப்பட்டாள்.
வேதங்களில் மொழியும் இலக்கியமும்
வேதமந்திரங்கள் உருவம் பெற்றகாலத்தில் ஆரியர்களின் மொழியிலும், இலக்கணத்திலும் பெரிதும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. மொழியியல் அறிஞர்கள் இந்தோ-இரானியன் என்ற மூல மொழியிலிருந்து பிரிந்ததே இரானியனும், சம்ஸ்கிருதமும் என்கின்றன. இரான் எனும் சொல் ஆரியன் எனும் சொல்லோடு தொடர்புடையதாக விளங்குகிறது. சவுராஷ்டிரர்களின் மத நூலான “அவெஸ்த”யில் இரானியன் மொழியின் பழைய வடிவத்தைக் காணலாம். வேதங்களும் அவெஸ்தயும் ஒரே காலத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும்.
சமஸ்கிருதம் | அவெஸ்த |
ஹிரண்ய | ஸரண்ய |
ஸேன | ஹேன |
ஸோம | ஹோம |
வேதங்களை இயற்றிய ஆரியர்களும், அஸ்வெத்தை இயற்றிய இரானியரும் ஒரே குடியேற்றத்தின் இரு பிரிவினரே. வட மேற்கிலிருந்து வந்த குடியேற்றக்காரர்களில் ஒரு பிரிவினர் இரானில் (பெர்சியாவில்) தங்கினர். மீதியுள்ளவர்கள் புதிய மேய்ச்சல் நிலங்களைத் தேடி தென்திசையில் சிந்து சமவெளியை அடைந்தனர். பழைய சமஸ்கிருதச் சொற்கள் திராவிட மொழியின் கலப்பாலேயே மாறியதென்று அறிஞரான டாகடர் ‘பரோவ்ஸிண்டா’ கருதுவதாக இந்நூலாசிரியர் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக ரிக் வேதத்தில் உலுகல, குண்ட, தண்ட, பல, பில, மதூர போன்ற திராவிடச் சொற்கள் காணப்படுகிறது. ரிக் வேதத்திற்கு முன்பே திராவிட மொழிகள் இருந்துள்ளன என்பதனை விளக்குகிறது.
சமஸ்கிருத சொற்களாக்கப்பட்ட திராவிடச் சொற்கள்:
அனல (தீ) | அனல்(தமிழ்), அனலு,சூடு(கன்னடம்) |
அர்க்க | எருக்கு(தமிழ்), எருக்கு(மலையாளம்) |
காள (கருமை) | கார் (தமிழ்) |
வேதங்களில் சதுர்வணம்
ஆரியர் போராட்டங்களில் தோல்வியுற்றவர்களை முக்கிய விஷயங்களிலிருந்து விளக்கி வைத்தனர். சூத்திரர்களின் தளராத சக்தியே பிற்கால வேத சமூகம் நிலைத்து நிற்க ஊன்றுகோலாக அமைந்தது. ஆரியர்களின் சுயகாரிய சொத்தாகவே சூத்திரர்களைக் கருதினர்.
வருண முறையின் ஆரம்பம்
சிந்து சமவெளியை அடைந்த ஆரியர்களிடம் இந்த வர்ணாசரமக் கட்டுப்பாடு என்பது இல்லை அவர்களும் புரோகிதனாகவும், தலைவனாகவும், விவசாயியாகவும் இருந்தனர். அரச உருவாக்கத்தின் போதே வர்ணாசரமக் கட்டமைப்பைத் தோற்றுவிக்கின்றன. போரில் தோல்வியுற்றவர்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு ஏற்பட்டவை வர்ணாசரமம். வருணங்களைத் தோற்றுவிப்பதற்கு ஆரியர்களின் கட்டுக்கதை யஜூர் வேதத்தில் காணப்படுகிறது. பார்ப்பனர்கள் கடவுளின் வாயிலிருந்து தோன்றியவர்கள். க்ஷத்திரியர்கள் கடவுளின் கையிலிருந்து தோன்றியவர்கள். வைசியர்கள் தொடைகளிலிருந்து தோன்றியவர்கள். சூத்திரர்கள் பாதங்களிலிருந்து தோன்றியவர்கள்.
பார்ப்பனீயத்தின் கொடிய தாண்டவம்
பார்ப்பனீயமும், வருணாசிரம தர்மமும் இந்திய வரலாற்றில் ஒரு இருண்ட காலத்திற்கு வித்திட்டது. வேதங்களும், பிராமணங்களும் பார்ப்பனக் கொடுமைகளுக்குத் தெய்வீக வேஷத்தை அளித்தது. சூத்திரதாரற்கள் பார்ப்பனர்களுக்கு எதிராகச் செயல்பட்டாள் கடும் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.
விஞ்ஞானத் தன்மையின்மையும் மூடநம்பிக்கைகளும்
விஞ்ஞானத் தன்மையற்ற எண்ணங்களுடையவும், மூடநம்பிக்கைகளுடையவும் உருவாக்கமே வேதங்கள் என ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
பிரபஞ்ச கொள்கைகள்
உலகத்தைத் தாங்கள் நம்புகின்ற கடவுளரே படைத்தாரென்பதை ஒவ்வொரு கடவுளை வணங்குபவர்களும் கூறுகின்றன. தாம் வணங்கும் கடவுள்தான் உயர்ந்தவர் எனக் காட்டுவதற்கு ஏற்படுத்திக் கொண்ட கதையேயாகும்.
சொர்க்கம்
தேவர்கள் ஆகாயத்திலும், சொர்க்கத்திலும் இருக்கின்றார்கள். மரணத்திற்குப் பிறகு மனிதன் சொர்க்கத்திற்குச் சென்றடைவான் என்பது வேதத்தை இயற்றிய சில ரிஷிகளின் கருத்து. வேள்வி செய்யாதவர்களும், தானம் செய்யாதவர்களும் சொர்க்கத்திற்குச் செல்லமாடார்கள், தீயில் எரிந்து சாம்பலாகின்றவர்களே சொர்க்கத்தை அடைவார்கள் என்று (பார்ப்பனர்கள்) கூறினார்கள். இதனடிப்படையிலே இறந்த உடலை எரிக்கும் வழக்கம் உருவானதாக இருக்கலாம் கருதிகிறார்.
வேதங்களில் ‘வைத்திய சாஸ்த்திரம்’
எக்காலத்தையும் போலவே வேத காலகட்டத்திலும் நோய்கள் மனிதனை வளைத்தன. இந்நோய்களை யாகங்களின் மூலம் விரட்டலாம் என்று முடிவு செய்தனர். காசநோய அதிக போகத்தின் விளைவாக உருவானதாகவும் யாகங்களே இதற்குச் சிறந்த பயனளிப்பது என்று பார்ப்பனர்கள் கருதினர்.
மந்திர வாதம்
அதர்வ வேதம் முழுதும் மந்திர வாதம் பற்றிய செய்திகளே காணப்படுகின்றது. மந்திரசக்தி கொண்டு நோய்களை அகற்றலாம் எனக் கருதினர். மந்திரங்களின் மூலம் பகைவர்களை அழித்து அவர்களது செல்வத்தைக் கைக்கொள்ளக்கூடும் என்று நம்பினர்.
வேதத்தின் இன்றைய நிலை
பழங்கால மனிதனின் சிந்தனைகளும், நம்பிக்கைகளும், மாயத்தோற்றங்களும், பயமும் எல்லாம் சேர்ந்த கலவையே வேதமாகும். பக்குவமற்ற உறவுமுறையினையும், பெண்களின் அடிமை முறையினையும், பார்ப்பன அல்லாதவர்களைத் தீண்டதகாதவர்களாகவும், பல மூட நம்பிக்கைகளைப் பிறப்பிப்பதுமாகவே வேதங்கள் காணப்படுகின்றன.
மதிப்புரை
நான்கு வேதங்கள் பற்றிய குறிப்புக் காணப்பட்டாலும் ஒரு வேதத்தின் தொடர்ச்சியாக மற்ற வேதங்களைக் காணமுடிகிறது. ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் நிலை நாட்டவே வேதங்களை இயற்றியுள்ளனர். வேத காலக்கட்டத்தை ஆசிரியர் கூறுவதன் நோக்கமாகக் குறிப்பிடுவது, சமய மூட நம்பிக்கைகளையும் தாண்டி வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகள் மூலம் வேதங்களின் காலத்தை நிர்ணயிக்க முயற்சிப்பது இப்பகுதியின் சிறப்புகளாகும். வேதங்களில் காட்டப்படுகின்றவர்களின் மூலம் தங்களின் ஆளுமைகளை நிலைநாட்டுவதற்கானச் செயல்களைச் செய்துள்ளனர் என்பதை இப்பகுதியின் மூலம் அறியமுடிகிறது. மனிதர்களையும் தாண்டியவர்களே(தேவர்கள்) என்பதைத் தங்களின் கீழ் இருப்பதாகக் கட்டமைப்பதன் மூலம் ஏனையோரும் தங்களின் கீழ் இருக்கவேண்டும் என்கின்ற நிபந்தனையை விதிக்கின்றன. பல மூட நம்பிக்கைகளையும் ஆசாரத்தினையும் கட்டமைத்துத் தாங்களே அதனைச் செய்வதற்குத் தகுதியானவர்கள் என்று மேலும் மேலும் அறிவுருத்துகின்றனர். எல்லா மதங்களினுடைய விஞ்ஞான தன்மைக்கும் புறம்பான செய்திகளே காணப்படுகிறது. குடும்ப வளர்ச்சி முறையையும், அரச விரிவாக்கத்தையும் குறிப்பிடும் பகுதியாகக் காணப்படுகிறது. சமஸ்கிருத்தில் வேற்றுமொழிச் சொற்கள் இருப்பதை அறிய முடிகிறது. தங்களுக்கு ஏற்றார் போல் வருணங்களை அமைத்து அதன் மூலமாக ஏனையோரை தனக்குக் கீழ் காட்டி தாங்களே உயர்ந்தவர் என்பதை நிலைநாட்டுகின்றனர். யாகத்தின் மூலம் எல்லாத்துன்பங்களையும் போக்கி விடமுடியும் என்று பரப்பியிருந்தன.
வேதங்கள் ஓர் ஆய்வு: நூல் அறிமுகம் by முரளிதரன் மு is licensed under a Creative Commons Attribution 4.0 International License.