1.
என்னிலிருந்து பாயும் அன்பு
நரம்பினைத் துண்டித்துவிடு
உன் கூரிய சொற்களைக் கொண்டு

என் அன்பு திசையில்லாத திட்டில்
எரிந்து போன மலர்கள்

உனக்கான அன்பு தேங்கித் தேங்கி
என்னுடல் முழுதும் பரவட்டும்

நிராகரிக்கப்பட்ட அன்பு
என்னிடத்திலேயே மிதக்கட்டும்

இதமான முள்ளாக
சருகில் கங்குகளாக
2.
விலாசம் அறியாமல் எரிந்து போன
மலர்களின் கனம்
தாங்காமல் சிணுங்குகிறேன்

எல்லாயிடங்களும் நிரம்பிவழிகிறது
திணித்துத் திணித்து விரல்கள்
மயக்கமுற்றுக் கிடக்கிறது

வழிந்துகிடந்த புன்சிரிப்பு மலர்களை
மெல்லிய இறகுப் பைகளில் நிரப்பி
யாவர்க்கும் அளிக்கிறேன்

அதில் சிலருக்கு மிதமிஞ்சியே
இருக்கக்கூடும் மலர்களை ஏந்திய
கரங்கள் அறியலாம் அதனை

உள்ளிழுத்த மூச்சினை
வெளியிடாமல்
தள்ளாடிய கனம் தான்
இளைப்பாறிய கணம்.
3.
உன் எண்ண அலைகளைக்
கணக்கிடும் கருவியினை இன்னும்
நீயே உருவாக்கவில்லை

யார் மன அலை சீராக இருக்கிறது
கால்களை வருடிச்செல்லும்
மெல்லிய அலைகளும்
தகர்த்தெறியச் சீறும்
அலைகளும்
ஒரே சமுத்திரத்தில் தான்
நீ என்ன எல்லாவற்றையும் கடந்த
ஆத்மனா!

பொருளின் ஆழம் அறியுமா சொல்?
அது நின்று கொண்டிருக்கிறது
வெறும் கூடாக
பொருள் வந்து உயிர்ப்பிக்க

இணக்கமில்லாத அன்பு உனக்கு
எரிச்சலை மூட்டுகிறது
பொழியும் அன்பின் இயல்பு
அதீத எரிச்சலை மூட்டுவதாய்
அறிந்த பின்பும் தொடர்கிறது
இடியின் முழுவீச்சினையும் விழியின்
பின்புறம் தாங்கியிருக்ககூடும்
எனது நேசமனம்
4.
நாழிகையின் நகர்த்தலில்
பெருமூச்சினில் வாழ்கிறேன்

இயற்கையின் முரணோடு
கைகோர்த்துச் சுழல்கிறேன்

என்றோ அறிந்த
முரணின் இசைவு
கைப்பற்றும்போது

பிரபஞ்சம் தானாகவே விலகுவதை
அறியும் முன்னமே நிசப்தத்தில்
உறைந்திருப்பேன்
5.
இதயம் இயங்குவதை நீட்டிக்க
இயலாத போது
முயலுகிறேன்
அன்பினை நீட்டிக்க
சூழலின் சுழலில் சுழலும் கணத்தில்
என் மனச்சுழலை எவர் அறிவார்!