நூல் : இலக்கணமும் சமூக உறவுகளும்
ஆசிரியர் : கார்த்திகேசு சிவத்தம்பி
பதிப்பகம் : என்.சி.பி.எச். வெளியீடு
முதல் பதிப்பு : ஜூலை 1982
பக்கங்கள் : 57

தமிழ் – சொல்லிலக்கண அமைப்பு, அமைப்பின் வரலாறு சுட்டி நிற்கும் சமூக மற்றும் உற்பத்தி உறவுகளையும், அவற்றின் மாற்றங்களைக் கால அடிப்படையில் ஆராய்வதனையும் நோக்கமாகக் கொண்டும், மொழியின் மாற்றங்கள் சமூகவியல் மாற்றங்களுக்கு ஏற்ப கட்டமைக்கப்படுகின்றன என்பதை விளக்குவதாகவும் இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலானது

  • உற்பத்தி என்பது குறித்தும்,
  • உற்பத்தி முறைமைகள் உற்பத்தி உறவுகளுக்கு எவ்வகையில் வழிவகுக்கின்றன என்பது குறித்தும்,
  • இவற்றிற்கும் மொழிக்கும் இடையேயுள்ள தொடர்பினையும்

எடுத்துக்கூறி அவற்றின்வழித் தமிழ் – சொல்லிலக்கண அமைப்பின் திணை, பால், எண், வேற்றுமை, வினையமைப்பு ஆகியன மக்களிடையே இருந்த உறவுகளை விளக்கிக் கூறுவதாக அமைகின்றது. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தமிழ் நூல்களின் எல்லைகளாகத் தொல்காப்பியம், தொல்காப்பியத்தின் உரைகள், நன்னூல், நன்னூலுக்கு எழுந்த உரைகள், ஆகியன அமைகின்றன.

ஒரு சமூகத்தினரின் பொருளியல் நிலைப்பட்ட உற்பத்தி முறைமையே அச்சமூகத்தில் உள்ள சமூக உறவுகளுக்கான திறவுகோல் எனக் குறிப்பிட்டு, உற்பத்தி முறைமை என்பது பொருளாதார அடித்தளம், சட்டவியல் – அரசியலமைப்பு மற்றும் கருத்துநிலை மேல்கட்டுமானம் ஆகிய மூன்று அங்கங்களைக் கொண்டது என விளக்கப்பட்டுள்ளது. இம்மூன்றில் இரண்டு மற்றும் மூன்றாம் வகையானது முதலாக அமைந்த பொருளாதார அடித்தளத்தினையே சார்ந்து அமைகின்றது என்றும், அப்பொருளாதார அடித்தளம் என்பது உற்பத்தி சக்திகள் (மூலப் பொருட்கள், கருவிகள், இயந்திரங்கள் முதலியன), உற்பத்தி நிலைநின்ற உறவுகள் (உற்பத்தியாளர்கள் தத்தம் தொழிலினைச் செய்யும் பொழுது ஏற்படும், ஏற்படுத்திக்கொள்ளும் உறவுகள்) என்ற இரண்டினை இணைத்து நிற்கின்றன என்ற நிலையையும் விளக்குகிறது.

மொழியென்பது கருத்தினைத் தெரிவிப்பதற்கான ஒரு கருவி என்பது ஒரு பக்கச் சார்பான கூற்று எனக் கூறி, மொழியைச் சமூக நிறுவனமென்ற முறையிலும், சமூக அமைப்பின் ஓர் அங்கம் என்ற முறையிலும் நோக்கும்பொழுது அது முழுச்சமுதாயத்தின் தொடர்பு வாயிலாக அமைகின்றது, என விளக்கப்பட்டுள்ளது. இவ்வகையான பொருண்மை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. ஏனெனில் இலக்கண நூல்கள் என்பதும் உயர்ந்த வழக்கினையே மொழியாகக் கொண்டு அதற்கு இலக்கணம் வகுக்கின்ற நிலையினைக் காணமுடிகிறது. உற்பத்தி முறைமை, உற்பத்தி உறவுகளின் தேவைக்கேற்ப மொழியின் ஆற்றல், மொழியின் வளர்ச்சி ஆகியன காணப்படுகின்றன என்பது ஆசிரியர் கருத்து. அவர் தனது கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் புய்கர், தாம்சன் மற்றும் ஃபிஷர் ஆகியோர் கருத்துக்களை எடுத்துக் கூறி இந்நிலைப்பாட்டினை நிறுவுகிறார். நூலாசிரியர் எடுத்துக்காட்டும் ஃபிஷர் என்பாரின் கருத்துக் கீழே கொடுக்கப்படுகிறது.

”மனிதன் தொழிலில் ஈடுபடாது…கருவி பிரயோகம் பற்றிய அனுபவமில்லாது, மொழியை இயற்கையின் அநுகரணமாகவும், நடவடிக்கைகளையும், பொருட்களையும் குறிக்கும் சின்னமாகவும், கருத்துநிலையில் தோற்றுவித்திருக்க முடியாது. ஆற்றல்மிக்க ஒன்றிலிருந்து மற்றது வேறுபட்டதான சொற்களை மனிதன், ஆச்சரியம் முதலிய மெய்பாடுகளுக்கு ஆட்படுபவன் என்பதால் மாத்திரமன்று; அவன் தொழில் செய்யும் உயிரினம் என்பதாலுமாகும்”. (ப. 10)

மொழி என்பது நாகரிகம் அடைந்த ஒரு வளர்ந்துபட்ட சமூகத்தில் தோன்றி ஒவ்வொரு நிலைகளில் வளர்ந்து இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொல்காப்பியத்தில் சொல்லதிகாரம் மற்றும் பொருளதிகாரம் ஆகியனவற்றில் திணை என்னும் சொல்லாட்சி முதன்மையாகப் பயின்றுவருகின்றது. சொல்லதிகாரத்தில் உயர்திணை, அஃறிணை, விரவுத்திணை என்றும், பொருளதிகாரத்தில் மக்களுக்கான ஒழுக்கம் என்றும் பொருள்படுதல் அறிந்தவையாக உள்ளன. ஆனால் சொல்லதிகாரத்தின் திணையினைப் பொருளதிகாரத்தின் திணையின்வழி அறிய வேண்டும் என்ற இக்கருத்துக் குறித்த நூலாசிரியரின் விளக்கங்கள் கீழே சுருக்கிக் கொடுக்கப்படுகின்றன.

பொருளதிகாரத்தில் திணை என்பதற்கு இளம்பூரணர், பொருள் அல்லது உள்ளடக்கம் என்றும், நச்சினார்க்கினியர் ஒழுக்க விதி என்றும் உரைவகுத்திருக்கின்றனர். சங்க இலக்கியங்களில் வரும் திணை என்னும் சொல் குடும்பம், கணம், குடியிருப்பு எனும் பொருள்படும் குடி என்பதனைச் சுட்டி வருகின்றது (புறம். 74, 77, 159, 373; பதி. 14, 31, 72, 82). இதே சொல்லானது, குறிஞ்சிப்பாட்டிலும் (255), மதுரைக்காஞ்சியிலும் (326) இடம்பெற்றுள்ளது. இவற்றிற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர், மதுரைக்காஞ்சியில் நிலம் என்றும், குறிஞ்சிப்பாட்டில் குலம் அல்லது குடும்பம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் திணை என்ற சொல்லுக்குக் குடும்பம் அல்லது குடியிருப்புப் போன்ற பொருள் இருந்துள்ளதனை அறிய முடிகிறது. இது முதலில் குடும்பம், குலம், குடி போன்றவற்றினைக் குறித்து அதன்பின் அத்திணைகளுக்கான மக்களின் ஒழுக்காறுகளாக மாறியிருக்கிறது என்ற நிலையினை எடுத்தியம்புகிறது, இந்நூல். மேலும், இவ்விடத்தில் திணை என்னும் சொல்லுக்கான பொருள்களாகத் திணை நிலங்குல மொழுக்கம் என்பதனையும் சூடாமணி நிகண்டு மூலம் எடுத்துக்காட்டியுள்ளது.

தொல்காப்பியக் கிளவியாக்கத்தில் (01) உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே என்னும் அடியில் உள்ள உயர்திணை என்பது, நில அடிப்படையில் மக்கள் கூட்டத்தினைத் திணையாகக் குறித்த மரபினைக் கொண்டு அங்கு வாழ்ந்த மனிதர்களைக் குறித்து நிற்கிறது. திணைப்பகுப்பு என்பது மக்கள், மக்கள் அல்லாத பிற(உயிருள்ளவை, உயிரற்றவை) என்ற நிலையிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுவே, உயர்திணைக்கு ஆண், பெண், பலர் என்ற பால்பகுப்பு இருக்க அஃறிணைக்கு ஒருமை, பன்மை என்ற இரு பால்பகுப்பு இருப்பது நோக்கத்தக்கது. அதாவது தொல்காப்பிய மரபியலில், சேவல், பெடை, பிடி, களிறு என அஃறிணை ஆண்பெண் எனப் பிரித்துக்காட்டியிருப்பது நோக்கப்படவேண்டியவொன்று. எனவே, அஃறிணையிலும் ஆண்பெண் என்ற நிலையினை அறிந்திருந்தும் பால் வகுத்தலில் ஒருமை, பன்மை என இரு நிலைகளில் வகைபாடு என்பது அமைந்திருப்பது மக்களை உயர்வாகக் கருதியதன் கூறு எனக் கொள்ளலாம். உயர் என்பதும் சிறப்புக்கருதியே பெயரடையாக வருகிறது என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.

மக்களை உயர்திணையாகவும், மக்கள் தவிர்ந்தவற்றை அஃறிணையாகவும் கொள்ளும் மரபு குழு நிலைக்குப் பொருந்தும் சிந்தனையென்றும், அதேபோலக் குழுநிலை வாழ்க்கையில் தெய்வத்தினைப் பற்றிய தத்துவக் கோட்பாடும் இருந்திருக்காது என்பதும் நூலாசிரியரின் கருத்து. இதற்குச் சான்றாகத் தொல். கிளவி. 04 – வது நூற்பா கொடுக்கப்படுகிறது. நன்னூலில் வரக்கூடிய மக்கள் தேவர் நரகர் உயர்திணை என்னும் முறையை நூலாசிரியர் கூறும்வழி நோக்கும்பொழுது, நன்னூல் எழுந்த காலங்களில் மத நிலைபட்ட கருத்துகள் மாற்றமடைந்துள்ளதனை அறிய முடிகிறது. மக்களுடன் தேவர், நரகர் என்பவையும் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வழி, இடைப்பட்ட காலங்களில் மதம்சார்ந்த கருத்துநிலைப்பாடுகள் ஊடுருவத் தொடங்கி நிலைபெற்றுள்ளன எனக் கொள்ளலாம்

திணை, பால் பாகுபாட்டிலேயே எண்ணும் இணைந்து நிற்கிறது. உயர்திணை, அஃறிணை ஒருமையில் ஆண்பால், பெண்பால் என்ற பாகுபாடும், உயர்திணைப் பன்மையில் பொதுப்பால் என்ற பாகுபாடும், அஃறிணையில் பெரும்பாலும் ஆண்/பெண் என்று பகுத்துக் கூறாமல் ஒன்றன் பால், பலவின்பால் என்ற பாகுபாடும் காணப்படுகின்றன என்பது முன்னர் நோக்கப்பட்டது. இதுவே, நன்னூலின் பாலறிகிளவிகளின் அமைப்புக்களும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. அதனை இக்காலக்கட்டத்துடன் நோக்கி, ஆண்பால் ஒருமை, பெண்பால் ஒருமை, ஆண்பாற் பன்மை, பெண்பாற் பன்மை எனப் பாலறி கிளவிகள் பல வகைகளில் அமைவதனையும், இவை போன்றவற்றிற்குக் கால வளர்ச்சியும், சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களும் காரணமாக அமைவதனையும் விளக்கிக்கூறுகிறது.

‘மக்களின் தனிப்பட்ட உறவுகளின் பொழுதே, சம்மந்தப்பட்டவர்களின் பால் வேறுபாடு’ முக்கியமானதாக அமைகின்றது. மக்களைத் தொகுதியாக நோக்கும் பொழுது அப்பால் வேறுபாடு முக்கியமற்றதாகிறது. அதாவது அவர்கள் முழுக்குழுவாகவே கருதப்பட்டார்களேயன்றிக் குழுவின் பிரிநிலைக் கூட்டங்களாக எண்ணப்படவுமில்லை, கருதப்படவுமில்லை (ப.27)

இதனடிப்படையில்தான் ’நாம்’ என்பதும் கணவாழ்க்கையில் உளப்பாட்டுத் தன்மைப் பன்மையாக முக்கியம் பெறுகிறது என்றும், நீ, நீர், நீங்கள் என்பவை முன்னிலையில் இருப்பவரின் சமூக அந்தஸ்தினைக் குறித்துக் கூறுவனவாயும் அமைகின்றன என்றும் விளக்குகிறது.

வேற்றுமை என்பது ஒரு பெயர்ச்சொலின் பொருள், பின் வரும் உருபு அல்லது சொல்லால் வேறுபட்டு நிற்பதாகும். வேற்றுமை குறித்து,

ஒரு பொருள் அல்லது ஒருவர், இன்னொரு பொருளுடனோ அன்றேல் இன்னொருவருடனோ, யாதானும் ஒரு வகையில் பௌதிக நிலைப்பட்ட அல்லது சமூக நிலைப்பட்ட அல்லது கருத்து நிலைப்பட்ட உறவினை ஏற்படுத்திக் கொள்ளும் பொழுது அவ்வுறவின் தன்மையைச் சுட்டும் வகையில் அப்பொருளினை அன்றேல் அவ்வொருவரினைக் குறிக்கும் பெயர்ச் சொலில் ஏற்படும் வேறுபாடு நிலையே வேற்றுமையாகும் (ப.34)

எனக் குறிக்கிறது. நாகரிகம் வளர, சமுதாயம் முன்னேற, அன்றாட வாழ்க்கையில் புதியன தொழிற்படத் தொடங்க, புதிய உறவுமுறை ஏற்படுவது இயற்கை. இப்பொருண்மைக்குச் சான்றாக மூன்றாம் வேற்றுமை அமைகிறது. அதாவது தொல்காப்பியர் இது வினைமுதலையும், கருவியையும் உணர்த்தி நிற்கும் என்கிறார். ஆனால் நன்னூலார், கருவி, கருத்தா, உடனிகழ்வு ஆகிய மூன்றனை உணர்த்தும் என்கிறார். நன்னூலின் உரையாசிரியர்கள், மயிலைநாதர் கருவி என்பதனைப் பிரித்து காரக்கருவி, ஞாபகக்கருவி என்றும், சங்கரநமச்சிவாயர், முதற்காரணம், துணைக்காரணம் எனவும் பிரித்துள்ளநிலைகள் காணப்படுகின்றன. இவ்வகையான ஒருப் பொருண்மையில் விளங்கிய ஒரு அமைவானது, காலங்கள் கடந்த நிலையில் இருவேறு பொருண்மைகளாகப் பிரிந்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருண்மைகளைத் தருவது நோக்கத்தக்கவொன்றாகும்.

செயல் அல்லது தொழிலைக் குறிப்பது வினையாகும். செயல், தொழில், உழைப்பு ஆகியன மனித சமுதாயத்தில் உறவுகளின் ஊற்றாக அமைகின்றன. தொல்காப்பியம் சொல்லதிகாரத்தில் வினை என்பது வேற்றுமை கொள்ளாது, மூன்றுகாலங்களொடு வரும் எனக் குறிப்பிடப்படுகிறது. (வினை. 01) அதுவே, பின் வந்த நன்னூலில், வினையின் இலக்கணமானது செய்பவன், கருவி, நிலம், செயல், காலம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைவது எனக் குறிப்பிடப்படுகிறது. (வினை. 01). குறிப்புவினை என்ற நிலையில் தொழிலின் காலத்தினை மறைவாகக் காட்டுவது எனக் கூறும் நிலை காணப்படுகிறது. இவ்வகையில் முதன்மை பெறுவதாக அமைவது செய்பவன் என்பதாகும். ஏனெனில் பிற அடிப்படைகள் அமைந்தாலும் பெரும்பான்மை வழக்கில் முதன்மைப்படுத்தப்படுவது, வினையினைச் செய்யும் கருத்தா என்ற கருத்து முக்கியத்துவம் பெறுகின்றது. இவற்றுடன் விளக்கி வியங்கோள் குறித்த கருத்துக்களும் விளக்கப்பட்டுள்ளன.

வியங்கோள் வினை குறித்துத் தொல்காப்பியர் கருத்தாக வியங்கோள் படர்க்கை இடத்துக்கு உரியது என்று குறிப்பினும், சங்க இலக்கியத்தில் தன்மை முன்னிலையில் வியங்கோள் பயன்படுத்தப்பட்டதற்குச் சான்றுகள் இருக்கின்றன. இது குறித்து ஆராய்ந்த நூலாசிரியர், வாழ்த்தல், விதித்தல், வேண்டிக்கோடல், வைதல் ஆகிய பொருண்மைகளில் வியங்கோள்வினை வரும் என்பது உயர்மட்ட மக்களின் நிலைகொண்டு வகுக்கப்பட்டன எனவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை இலக்கணம் பிரதிபலிக்க வேண்டியதாயிற்று எனவும் கருத்துக்களை முன்வைக்கிறார். இதேபோல தன்வினை, பிறவினை குறித்த செய்திகளும் இப்பகுதியில் இடம்பெறுகின்றன. இது குறித்துக் குறிப்பிடுகையில் சொத்துரிமை வளர்ச்சி, தொழில்கள் பிரிக்கப்படுதல், தொழிற்பிரிவு ஆகியன நிலையான பொருளாதார அம்சங்களாகப் பரிணமித்ததன் பின்னரே தன்வினை, பிறவினை என்ற வகைமை தோன்றியிருக்கும் என்பது இந்நூல் எடுத்தியம்பும் முக்கிய கருத்தாக்கமாக அமைகின்றது. தனக்குரிய வினை, பிறருக்குரிய வினை எனப் பிரித்தலென்பது, தொழிலால் பிரிக்கப்பட்ட நிலையினை உணர்த்தி நிற்கின்றது எனக் கூறப்பட்டுள்ளது.

இறுதியாக, சொற்களும் அவை தோன்றுகின்ற முறைமைகளும் சமூகத்தின் சூழலுக்கேற்ப அமைகின்றன என்பதை விளக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது. தொல்காப்பியத்தில் கூறப்பட்டதனைத் தாண்டிய கருத்தினை நன்னூல் எடுத்தியம்பினாலும், அது தொல்காப்பியத்தின் மரபினை ஒட்டியதாகவே கருத்துக்களை அமைத்துக்கூறும் மரபு என்பது இருந்திருக்கிறது. ஆனால் அவ்வாறு புதிதாக உருவாவதை உற்று நோக்குங்கால் அது உருவான சூழல் என்பது தென்படத்தொடங்குகிறது. சொல்லிலக்கணத்தைச் சமூகப் பார்வையினைக் கொண்டு நோக்கும் இம்முயற்சி இன்னும் ஆராயப்படவேண்டியது என நூலாசிரியர் குறிப்பிட்டாலும் இம்முறையினை ஆராயும் பிற ஆய்வாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இந்நூல் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இப்பொருண்மையினை மொழியியல் கொண்டு மேலாய்வு மேற்கொண்டால் சிறப்புடையதாக அமையும்.

இரா. பூங்குழலி, இளமுனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்ப்பிரிவு – இந்திய மொழிகள் மையம், ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி – 110067

Creative Commons License
இலக்கணமும் சமூக உறவுகளும்: நூல் மதிப்புரை by இரா பூங்குழலி is licensed under a Creative Commons Attribution 4.0 International License.