vazhum mudhadhayar
நூல்: வாழும் மூதாதையர்கள் தமிழகப்பழங்குடிகள்
ஆசிரியர்: முனைவர் அ. பகத்சிங்
முதல் பதிப்பு: நவம்பர் 2019
வெளியீடு: உயிர் பதிப்பகம், எண் 4, 5 வது தெரு, சக்தி கணபதி நகர், திருவொற்றியூர், சென்னை 600 019.
பக்கம்: 179
விலை: ரூ. 600

காலனியத்துவக் காலத்திலிருந்து தற்காலம்வரை பழங்குடிகள் குறித்தான ஆய்வு நூற்களும், அவர்கள் குறித்து வரலாறு, பண்பாடு தொடர்பான நூற்களும் தொடந்து வந்தவண்ணமே இருக்கின்றன. எல்லா நூல்களும் பழங்குடிகளை நம்மிலிருந்து வேறுபட்டவர்களாகவும் சிறப்புமிக்கவர்களாகவும் காட்டும் மனநிலையில் அமைந்திருக்கும். இல்லை என்றால் இலைதழைகளை ஆடையாக அணிந்தும், தலையில் எலும்புகளைச் சுமந்து “குய்யோ முய்யோ” என்று கத்திக்கொண்டு அலைபவர்களாக நோக்கும் முறையும், கருணையோடு பார்க்கும் முறையும், பழங்குடிகளைப் பொதுவெளிச் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்துப் பார்க்கும் முறையும் நிலவி வந்த சூழலைக் கட்டுடைத்துப் பழங்குடிகள் நம்மைப் போன்ற சகமனிதர்கள்தான், அதுமட்டும் இல்லாமல் தொல்குடிகளாகிய நமது முன்னோர்களின் அறுபடாக் கண்ணியாக விளங்கக்கூடியவர்கள்தான் தமிழகப் பழங்குடிகள் என்ற அடிப்படையில் அமைந்திருக்கும் அ.பகத்சிங்கின் நூல் மற்றவற்றிலிருந்து தனித்தன்மை மிக்கதாக அமைந்துள்ளது.

இயற்கையுடன் இயைந்து வாழும் வாழ்க்கையிலிருந்து அறுபட்டு நாம் வாழும்பொழுது, இன்னும் இயற்கையுடன் இயைந்து வாழும் மூதாதையர்களின் தொடர்ச்சியாகிய பழங்குடிகளின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அவர்கள் பின்பற்றும் பண்பாடு, மருத்துவம் மற்றும் ஆளும் வர்க்கத்தால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களையும், அதனால் தினக்கூலிகளாவும் கொத்தடிமைகளாகவும் மாறியுள்ள சூழலையும் கள ஆய்வின் மூலம் எளிமையான மொழியமைப்பில் இந்நூல் வெளிப்படுத்துகிறது.

நூலின் அமைப்பு

பழங்குடிகள் குறித்தான ஆய்வுகள் விரவிக்கிடப்பினும் தமிழகப் பழங்குடியியலுக்குப் புதுவரவாக வந்துள்ள அ.பகத்சிங்கின் இந்த நூல் பல தனித்தன்மைகளைப் பெற்றிருக்கிறது.

முன்னுரை – பேரா ஆ.செல்லப்பெருமாள்

மானிடவியல், இனவரைவியல், பழங்குடியியல் என்ற அறிவுத்துறைகளின் அறிமுகம் தமிழ்நாட்டில் நிகழ்ந்த பின்னரே, பழங்குடிகள் குறித்த நமது தொடக்கக் காலப் புரிதல் எவ்வளவு பிற்போக்கானது என்பது தெரிய வந்தது. முனைவர் அ.பகத்சிங் எழுதியுள்ள இச்சிறு நூல் பழங்குடிகளின் வாழ்வியலை மட்டுமின்றி வாழ்வியல் சார்ந்த இடர்பாடுகளையும், நாம் அறியும்படி செய்துள்ளது.

அணிந்துரை- பேரா ஆ.சிவசுப்பிரமணியன்

தமிழ்நாடு அரசு முப்பத்தியாறு பழங்குடிச் சமூகங்களை அட்டவணைப்படுத்தி வைத்துள்ளது. அவற்றுள் பதிமூன்று பழங்குடிச் சமூகங்களைப் பற்றி புகைப்படங்களுடன் பதிமூன்று கட்டுரைகளில் விளக்குகிறார். அவை,

 • இருளர்கள்: வெளிச்சத்திற்கு வெளியே எளிய வாழ்கை
 • ஆனைமலைக் காடர்கள்
 • அகத்தியமலைக் காணிகள்
 • காடுகளின் நாயகர்
 • கோத்தர்கள்: மாறும் வாழ்வும் மங்காத கலையும்
 • நீலகிரி குறும்பர்கள்: ஒன்றாக்கப்பட்ட அடையாளமும் பன்முகப் பண்பாடும்
 • குறுமன்(ஸ்)கள்
 • கிழக்குத் தொடர்ச்சிமலை மலையாளிகள்
 • பாண்டிய நாட்டு முதுவர்கள்
 • பளியர்: அடையாளம் இழக்கும் தமிழகத் தொல்குடி
 • பணியர்: சுரண்டலில் இருந்து மீளாத வாழ்கை
 • சத்தியமங்கலம் சோளகர்கள்
 • தோடர்கள்: மாற்றத்தினூடே நீலிகிரியின் மகுடம்

இருளர்கள், ஆனைமலைக் காடர்கள், காட்டு நாயகர்கள், பளியர்கள், பணியர்கள், அகத்தியமலைக் காணிகள், கோத்தர்கள், முதுவர்கள், குறும்பர்கள், சோளர்கள், குறுமன்கள், மலையாளிகள், தோடர்கள் எனப் பதிமூன்று பழங்குடியின மக்களின் தோற்றம், அம்மக்களின் வாழ்விடம், பண்பாடு, கலை, அம்மக்களின் எண்ணிக்கை, கல்வியறிவு, உணவு, தொழில், வழிப்பாடு, மருத்துவ அறிவு, இயற்கையறிவு, கைவினைப்பொருட்கள் செய்யும் தனித்திறன் மற்றும் ஆளும் வர்க்கத்தினரால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், அதனால் தினக்கூலிக்குலியாகவும், கொத்தடிமைகளாகவும் மாற்றப்பட்டதை இப்பதிமூன்று கட்டுரைகளின் பொதுவான எடுத்துரைப்பாக உள்ளன. நூலின் வடிவைப்பு நேர்த்தியாகவும் வாசிக்கத் தூண்டுவனவாகவும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அருமையான புகைப்படங்கள் நமக்கு நேரில் சென்று பார்த்த அனுபவத்தினை வழங்கக்கூடியதாகவும் உள்ளன.

வாழும் மூதாதையர்கள்

ஆதிவாசி, காட்டுவாசி, மலையினமக்கள், முதுகுடி, ஆதிக்குடி, பூர்வகுடி, இனக்குழு என்று பல பெயர்களால் அவர்களை அடையாளப்படுத்தினாலும் பொதுவாக அனைவரும் பழங்குடிகள் என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனர். பழங்குடிகள் என்ற சொல் நம்மையும் அவர்களையும் பிரித்து நெடுந்தொலைவில் வைத்திருக்கிறது. வாழும் மூதாதைகள் என்றால் இவருக்குமான இடைவெளியைக் குறைத்து மிக நெருக்கமாக வைப்பதாக உணர முடிகிறது. அதனால்தான் இந்நூலிற்குத் தலைப்பினை நூலாசிரியர் அவ்வாறு தேர்ந்தெடுத்துள்ளார் என உணரமுடிகிறது.

இருளர்கள் காடுகளில் கிடைக்கக்கூடிய கிழங்கு, உடும்பு, முயல் முதலிவற்றை உணவாகச் சமைந்து உட்கொள்கின்றனர் என்று இருளர்களைப் பற்றி ஆசிரியர் பேசும்போது குறிப்பிடுகிறார். இதைப்போன்று நற்றிணையில் முல்லைத் திணையில் தலைவன் வேட்டைக்குச் சென்று உடும்பு, ஈசல் போன்றவற்றை வேட்டையாடி வீட்டிற்கு வந்து சமைத்து உண்பதாக ஒரு பாடல் அமைந்துள்ளது. தொல்குடிகளின் எச்சம் இருளரின மூதாதையர்களிடம் தொடச்சியாகவே காணப்படுகிறது என்பதை இவற்றின் மூலம் அறிமுடிகிறது.

தொல்குடிகளாகிய பழங்குடிகள் நம்மைப்போன்று இயந்திரகதியாய் செயற்கைத் தன்மையுடன் இயற்கையிலிருந்து பல மைல் தூரம் கடந்துச் சென்றவர்கள் அல்லர். இயற்கையோடு இயைந்து காட்டுயிர்களோடு தவழ்ந்து வாழப்பழகியவர்கள். ஆனால், இன்று நாம் நமது வாழ்வினைச் சீர்குலைத்ததும் இல்லாமல் அவர்களின் வாழ்வையும் சீர்குலைத்து வருகிறோம் என்பதே உண்மை என்று நடுநிலைத் தன்மையுடன் ஆசிரியர் விளக்குகிறார்.

பழங்குடிகளின் வாழ்கையானது எவ்விதச் சிக்கல்களும் அற்று எளிய முறையில் நிம்மதியாகவும் சிறப்பாகவும் இருப்பதாக ஒரு மாயத்தோற்றத்தைச் சிலர் உருவாக்கி வருகின்றனர். பழங்குடிகளின் வாழ்வியல் குறித்து எழுதும் பலரும் இந்த வேலையை மிக நேர்த்தியாகச் செய்கின்றனர். இயந்திரகதியான நம் வாழ்க்கை முறைக்கு எதிராகப் பழங்குடிகளின் வாழ்க்கை முறையினைச் சொர்க்கபுரியாக நிலைநிறுத்த சிலர் முயல்கின்றனர். புனைவியல் வாயிலாக இவ்வாறு உணர்த்தக்கூடியவருக்கும் அல்லது பேசக்கூடியவருக்கும் எதிராக அ.பகத்சிங்கின் இந்நூல் அமைந்துள்ளது. தொல்குடிகளாகிய பழங்குடிகளைப் பற்றி எழுதும்போது அவர்களின் வாழ்க்கையை அழகியல்தன்மையுடன் சித்தரிக்கும் நிலையில் மட்டுமில்லாமல் அவர்களின் வாழ்வியல் சார்ந்த இன்னல்கள் போன்றவற்றையும் எழுதும்போதுதான் பயனுடையதாக அமைகிறது. அவை இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

நம்மாலும் நமது தேவைகளாலும் இன்றைய சூழலில் சுற்றுச்சூழல் மிக மோசமாகச் சீர்கேடடைந்துள்ளது. ஆனால் தற்பொழுது வரை பழங்குடியின மக்கள் இயற்கைக்கு எவ்விதப் பாதிப்பு வராமல் வாழக் கற்றுக்கொண்டவர்கள். காடுகள், மலைகள் அவர்களால் பாதுகாத்து வந்த நிலையில் அவர்களால் காடுகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்று ஆளும் வர்க்கமும் நாமும் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றி நம் வாழ்வைப் போன்று அவர்களையும் வாழ நிர்ப்பந்திக்கிறோம் என்பதே யதார்த்தமாகும்.

சங்க காலத் தொல்குடி மக்கள் இயற்கையுடன் இயைந்து வாழந்த சூழலைப் பண்டைய தமிழ் இலக்கியங்கள் உணர்த்துகின்றன. அதை நாம் பழங்குடிகளாகிய வாழும் மூதாதையர்களிடம் காணலாம் என்ற குரலாகவும் இந்நூல் அமைந்துள்ளது. திருமணமுறையில் பழங்குடிகளிடம் சுதந்திரமான பெண்ணடிமையற்ற சூழல் காணப்படுவதையும் காணமுடிகிறது. பாலியல் போன்ற எவ்விதத் துன்புறுத்தல்களும் இல்லாநிலையில் வாழ்ந்தவர்களுக்கு வனத்துறை அதிகாரிகளால் பழங்குடியினப் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டும், அவர்களின் இயற்கையான மருத்துவ அறிவு ஒரு சில நிறுவனங்களால் வியாபாரமாக மாற்றப்பட்டும் பழங்குடிகளுக்குப் பயனில்லாமல் நிறுவனங்களின் பெயர்களில் காப்புரிமை பதிவு செய்யப்பட்டு இருப்பதையும் பதிவு செய்துள்ளார். இவை இப்படியென்றால் ஒவ்வொரு பழங்குடியினக் குழுக்களிடமும் இருக்கும் இயற்கைச் சார்ந்த மருந்தவ அறிவை ஆளும் வர்க்கமும் நாமும் கண்டுக்கொள்ளாமல் கடந்துச் செல்கிறோம்.

இந்நூலில் குறிப்பிட்டுள்ள இருளரின மக்கள் தொடங்கி தொதவர் இன மக்கள் வரைக் குறிப்பிட்ட பதிமூன்று இனப் பழங்குடிகளும் ஆளும் வர்க்கத்திடமிருந்து தங்களுக்குரிய இனச்சான்றிதழைப் பெறுவதற்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையையும் அரசு ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவதையும் முக்கியமாகக் குறிப்பிடுகிறார். சிலர் பழங்குடியின மக்களின் சலுகைகளைப் பெறுவதற்குத் தாங்களும் அவ்வின மக்கள்தான் என்று போலியான சான்றிதழ் பெற்றுக் கொள்ளுவதனாலும் அதனால் உரிய மக்களுக்குச் சென்று அடையாத நிலை உள்ளதையும் விளக்குகிறார்.

இருளர்கள், ஆனைமலைக் காடர்கள், காட்டு நாயகர்கள், பளியர்கள், பணியர்கள், அகத்தியமலைக் காணிகள், கோத்தர்கள், முதுவர்கள், குறும்பர்கள், சோளர்கள், குறுமன்கள், மலையாளிகள், தோடர்கள் எனப் பதிமூன்று பழங்குடிகளிடமும் ஏதாவது பொருட்கள் தயாரிப்பதில் நுட்பமான அறிவுடையவர்களாகக் காணப்படுவதை அறியமுடிகிறது. உதாரணமாக, காடர்கள் மூங்கிலில் தண்ணீர், தேன் போன்றவைச் சேமித்துவைக்கும் பாத்திரங்கள் தயரிப்பதிலும், முறம் மற்றும் பாய் முடைவதிலும் திறன்மிக்கவர்கள். இதுபோன்று ஒவ்வொரு பழங்குடியின மக்களும் பண்பாடு, காலச்சார, கலை, திருவிழா போன்றவைகளிலும் தனித்தன்மை மிக்கவர்களாகவும் காணப்படுகின்றனர் என்பதை உணர முடிகிறது.

பழங்குடிகள் பற்றிப் பொது வெளிச் சமூகத்திடம் பதிந்துள்ள பொதுப்புத்தி எண்ணங்களைக் கலைத்து, பழங்குடியினர் மரபார்ந்த அறிவு மிக்கவர்கள், இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த சங்கத் தொல்குடி மக்களின் மரபின் தொடர்ச்சிக் கண்ணியாக வாழும் நமது மூதாதையர்கள்தான் பழங்குடிகள் என்று இந்நூல் பறைசாற்றுகிறது. இவ்வகையில் பழங்குடியின மக்கள் பற்றி வந்த நூல்களிலிருந்து இந்நூல் மாறுபடுகிறது. பொது வெளிச் சமூகத்திற்கும் பழங்குடிகளுக்கும் இடையில் இருந்த இடைவெளியைக் குறைக்கிறது. பழங்குடியின ஆய்வுக்கும், பழங்குடிகளுக்கும், பொதுவெளிச் சமுகத்திற்கும் வாழும் மூதாதையர்கள்(தமிழகப் பழங்குடிகள்) புதுவரவுதான். அழிந்துவரும் பழங்குடியினப் பண்பாடு, இயற்கையான மருத்துவ அறிவு போன்றவற்றை மீட்டுருவாக்கம் செய்யவும் அழியா வரலாற்று ஆவணக் களஞ்சியமாக இந்நூல் விளங்கும்.

* ஜெ. கணேசபாண்டியன், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் துறை பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் வாராணசி, உத்திரப் பிரதேசம்.

இந்த பதிவை குறிப்பிடும் முறை:


அழியா வரலாற்று ஆவணக் களஞ்சியம் வாழும் மூதாதையர்கள் (தமிழகப் பழங்குடிகள்) – நூல் அறிமுகம் by ஜெ கணேசபாண்டியன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License.