என் கவிதைகளுக்கு
என்னால்
உரிமம் கோர இயலாது
அவைகளைப் புரிந்து கொண்டபின்
உங்களுக்கும்
சொந்தமாகி விடலாம்
தவறேதும் இல்லை
நாளை
அரசுக்கெதிராகவும்
சுரண்டலுக்கெதிராகவும்
எழுதப் போகிறேன்போகிறோம்
தயாராக இருங்கள்....
நான்
துப்பாக்கிக் குண்டுகளுக்கு
இரையாகலாம்
நிச்சயம் நீங்களும்....
-- த.வ.அநார்யா
வார்த்தைகளில்
அளவாய்த்தான்
என்னை
வெளிப்படுத்த முடியும்
உணர்ச்சிகளைக்
கட்டுப்படுத்தித் தானே
மொழியும் பிழைக்கிறது
என் வலிகள் கூட
தெளிவாய்ப் புரியாது
உணர்ச்சிகளில் நழுவும்
உண்மையைக் கண்டறிவதும்
கடினம்தான்
அதனால்
என்னை அறிவதும்
ஆதரிப்பதும்
அரிதுதான்
என்னோடு சேர்ந்து
செருப்பின்றி பயணி
எசப்பாட்டு பாட
அருகதை உனக்குண்டு
-- த.வ.அநார்யா
அநார்யா கவிதைகள் -1 by த வ அநார்யா is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
pen by Sean MacEntee is licensed under a Creative Commons Attribution 4.0 International License.